மாவீரர் துயிலும் இல்லங்களில் இம்முறை நினைவு அஞ்சலிகளை நிகழ்த்துவதற்கு அரசாங்கம் அனுமதித்ததால் சுதந்திரம் கிடைத்துவிட்டதென சிலர் நினைத்தாலும், அரசாங்கம் திட்டமிட்டு இவ்வாறு மாயையை ஏற்படுத்தி மக்களை அதற்குள் தள்ளிவிட்ட முயற்சிக்கின்றதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.
குறித்த மாயைக்குள் மக்களை தள்ளிவிடுவதன் மூலம் மக்களின் நிரந்தர பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்காமல் இழுத்தடிப்பது அல்லது வழங்காமலேயே விடுவது என்ற நோக்கமே அங்கு மறைந்துள்ளது என்பது பலருக்கு தெரியாதென அவர் மேலும் குறிப்பிட்டார்.
மன்னாரில் நேற்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்பட்ட வட்டக்கண்டல் படுகொலை நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்தோடு, தமிழர்களுக்கு மத்தியில் பிளவை ஏற்படுத்துவதே அரசாங்கத்திற்கு தேவையாக உள்ளதென குறிப்பிட்ட வினோநோகராதலிங்கம், அதற்கு ஏற்றாற்போல் தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் சில விடயங்களில் பிளவுபட்டு நிற்கின்றர் என சுட்டிக்காட்டினார்.