‘தெறி’, ‘பைரவா’ படங்களை தொடர்ந்த விஜய் அடுத்ததாக அட்லி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். தெறி படத்திற்கு பிறகு விஜய் – அட்லி மீண்டும் இணையும் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே அதிகமாகியுள்ளது.
பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கப்போவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இப்படத்தில் நடிப்பவர்கள் குறித்த விஷயங்கள் வெளியாகிக் கொண்டு இருந்தன. ஆனால், இதுவரை படக்குழு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய முழுவிவரங்களையும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி, இப்படத்தில் விஜய்யுடன் ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா என மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேல், சத்யன் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ஏ.ஆர்.ரகுமான் இசையையும், ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவையும், ரூபன் படத்தொகுப்பையும், முத்துராஜ் கலையையும், அனல் அரசு சண்டைக் காட்சியையும், ‘பாகுபலி’ உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் இப்படத்திற்கு திரைக்கதையையும் அமைக்கிறார்கள்.
நாளை முதல் இப்படத்தின் படப்பிடிப்பை சென்னையில் தொடங்கவிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து வட இந்தியாவில் ஒரு சில பகுதிகளிலும், அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளனர். அட்லி கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இந்த படம் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.