இலங்கை படையினருக்கு ஜெயலலிதாவினால் நிறுத்தப்பட்ட பயிற்சிகளை மீண்டும் வழங்குவது தொடர்பாக இந்தியாவும் இலங்கையும் பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன, புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டும் போதே இதை தெரிவித்துள்ளார். தொடர்ந்து,
தமிழ் நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில், பயிற்சிகளை பெறுவது இலங்கை படை அதிகாரிகளின் நீண்ட மரபாகும்.
ஜெயலலிதாவினால் நிறுத்தப்பட்டுள்ள பயிற்சிகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக இந்தியாவுடன் பேச்சு நடத்துகிறோம்.
விரைவில் மீண்டும் இலங்கை படையினருக்கு வெலிங்டனில் பயிற்சி அளிக்கப்படும் என்று நம்புவதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றம் இழைத்த இலங்கை படைகளுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கப்படுவதற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இலங்கை படையினருக்கு தமிழ்நாட்டில் இனி பயிற்சி அளிக்கக் கூடாது என்று இந்திய மத்திய அரசுக்கு அறிவித்து பயிற்சிகளை நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.