மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டுமாயின் வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதுடன் விலைகள், டீசல் வாகனங்களை விட குறைவாக இருக்க வேண்டும் என சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின் உற்பத்தி திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து துறையினர் மின்சாரத்தை பயன்படுத்துவது அதில் உள்ள சவால்கள் என்ன என்பதை அடையாளம் காண நியமிக்கப்பட்ட குழுவின் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், அரச நிறுவனங்கள் மின் சக்தியில் இயங்கும் வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அரசாங்க நிறுவனங்களின் போக்குவரத்து பயன்பாட்டுக்கு இந்த மின்சார வாகனங்கள் உகந்ததா, தேவையான தூரம் இந்த வாகனங்களில் பயணிக்க முடியுமா, நீண்ட தூரம் செல்லக் கூடிய வகையில் உலகில் மின்சார வாகனஙன்கள் தயாரிக்கப்பட்டுள்ளனவா என்பன குறித்தும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
மின்னியல் வாகன பயன்பாடு தொடர்பில் ஒரு துறையை மாத்திரமே ஊக்குவிக்காது, அது முழு நாட்டுக்குமான பொது வேலைத்திட்டமாக மாற வேண்டும்.
மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்யும் போது, போக்குவரத்து துறையின் உண்மையான தேவைகள் என்ன என்பதை அறிந்துக்கொள்வது முக்கியமானது என மேலும் தெரிவித்துள்ளார்.