தற்கால மற்றும் எதிர்கால சவால்களுக்கு முகம்கொடுக்கக் கூடியவகையில் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டமிடல் மேற்கொள்ளப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிதி அமைச்சு, பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட செயற்படுத்துகை அமைச்சு, நிதி மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சு மற்றும் சமுர்த்தி உள்ளக பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
பொருளாதார கொள்கை மற்றும் திட்டமிடல் அமைச்சின் கீழ் எதிர்காலத்தில் அனைத்து அரச மற்றும் தனியார் துறையை இணைத்து செயல்படும் விதத்திலான பொருளாதார மறுசீரமைப்பை நோக்காகக் கொண்ட நிலையான பொருளாதார கொள்கையை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.
அதற்காக கொள்கை ஆய்வு நிறுவனம் மூலம் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
கொள்கைகள் அனைத்தையம் தயாரிக்கும் போது கண்டிப்பாக சரியான தரவுகளின் கீழ் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த வகையில் பொருளாதார கொள்கை மட்டுமன்றி அனைத்து கொள்கைகளையும் சரியான தகவல்களைக் கொண்டு தயாரிக்க்பட்ட வேண்டும்.
அதற்காக எமது அமைச்சின் கீழ் வரும் குடிசன மதிப்பீட்டு திணைக்களத்திற்கும் முக்கிய பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த வருடத்தில் மேற்கொள்ளவுள்ள குடிசன மதிப்பீட்டை 2023ஆம் வருடத்தில் நிறைவு செய்வதற்கும் நாம் எதிர்பார்த்துள்ளோம்.
இதேவேளை அரச துறையில் நிதி அற்ற வளங்களை முகாமைத்துவம் செய்தல் மற்றும் அதனை பயனுள்ள விதத்தில் உபயோகிப்பதற்கான கொள்கை ரீதியான தீர்மானத்தை மேற்கொள்வதற்கு கட்டுப்பாட்டாளர் நாயகம் அலுவலகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அழுத்தங்களை ஏற்படுத்தும் உபாய அபிவிருத்தி திட்டம் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது நிதியமைச்சு மற்றும் முதலீட்டு சபை ஆகியவற்றுடன் நெருக்கமாக செயற்படுவதற்கும் தீர்மானித்துள்ளோம்.
மேற்படி பொருளாதார கொள்கையானது நடைமுறை மற்றும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளக்கூடிய வகையில் பொருளாதார, சமூக மற்றும் சுற்றாடல் உள்ளிட்ட விடயங்களை கவனத்தில் கொண்டு நிலையான கொள்கையாக அமைய வேண்டும்.
தற்போது நிலவும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் சர்வதேச நாடுகளைப் போன்றே இலங்கையும் பொருளாதார அபிவிருத்தியில் பலவீனமான நிலையை கடந்து வந்துள்ளது. அந்த சவாலை வெற்றி கொண்டு நிலையான அபிவிருத்தி மறுசீரமைப்பு மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்காக அனைத்து பிரிவுகளையும் இணைத்துக் கொண்டு குறுகியகால, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டங்களை தயாரிப்பதற்கு தேசிய திட்டமிடல் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
எனவே எதிர்வரும் வருடங்களில் கொரோனா தொற்று நிலைமை முடிவடைந்து, எமது பொருளாதாரம் திட்டமிடப்பட்ட பிரகாரம் மற்றும் செயற்திறமையுடன் முன்னுக்கு செல்லும் என நாங்கள் நம்புகின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.