புத்தளம் – எலுவங்குளம் பிரதான வீதியின் வண்ணாத்தவில்லு பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 16 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எலுவங்குளத்தில் இருந்து புத்தளம் நோக்கிப் பயணம் செய்த தனியார் பயணிகள் பேருந்து ஒன்று எதிர் திசையில் பயணித்த வான் ஒன்றுக்கு இடம்கொடுக்க முற்பட்ட போது வீதியோரத்தில் உள்ள வடிகானுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தின் போது இரண்டு சிறுவர்கள் உட்பட 16 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 11 பேர் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 5 பேர் வண்ணாத்தவில்லு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர்.
புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வயோதிபர் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் வீதியின் அருகில் இருந்த மின் கம்பம் ஒன்றும் முழுமையாக சேதமடைந்துள்ளதால் வண்ணாத்திவில்லு பகுதியில் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.
விபத்து சம்பவம் தொடர்பில் வண்ணாத்தவில்லு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.