குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விங் கமாண்டர் விமானியான பிருத்வி சிங் சவுகானின் மகள் தானும் ஒரு விமானியாக மாறுவேன் என உறுதிப்பட சபதம் எடுத்துள்ளார்.
குன்னுார் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் விமானப் படையின் விங் கமாண்டராக பணியாற்றிய பிருத்வி சிங் சவுகானும் ஒருவர்.
சவுகானின் உடலுக்கு அவரின் மகள் ஆராத்யா (12) மகன் அவிராஜ் (7) ஆகியோர் இறுதிச்சடங்கு செய்து சிதைக்கு தீ மூட்டினர். 7ஆம் வகுப்பு படிக்கும் ஆராத்யா அளித்த பேட்டியில், நான் என்னுடைய தந்தையை பின்பற்றி நடக்க விரும்புகிறேன்.
அவர் வழியில் நான் இந்திய விமானப் படை விமானியாக மாறி பணியாற்றுவேன். என் தந்தை எனக்கு முன்மாதிரியாக இருந்தார். அவர் எப்போதும் எனது இலக்குகளில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தி வந்தார். நான் அவருடைய ஆலோசனையைப் பின்பற்றி என்னுடைய கனவை அடைவேன்.
அவர் சொன்னது போலவே செய்ய ஆசைப்படுகிறேன். இதில் மாற்றம் எதுவும் இல்லை என உறுதிப்பட தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், மதிப்பெண்களை பெற வேண்டும் என அதை துரத்தாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என என் தந்தை எனக்கு அறிவுரை கூறுவார், அதாவது படிப்பில் கவனம் செலுத்தினால் மதிப்பெண்கள் தானாக வரும் என்பார் என கூறியுள்ளார்.