கண்டி – குண்டசாலை பகுதியில் சமையல் எரிவாயுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவத்தில் எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த பெண்ணின் கணவரினால் சமையல் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தென்னிலங்கை ஊடகமொன்றிற்கு அவர் வழங்கி செவ்வியின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களினால், 10 கோடி ரூபா இழப்பீடு கோரி குறித்த வழக்கினை தாக்கல் செய்யவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
மாத்தளை – வில்கமுவ பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தமது பிள்ளையின் மேலதிக கற்றல் செயற்பாடுகளுக்காக குண்டசாலை பகுதியில் உள்ள தற்காலிக வீடொன்றில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையிலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கமோ, அதனுடன் தொடர்புடைய பொறுப்பு வாய்ந்த நிறுவனமோ எந்தவொரு ஆய்வினையும் இதுவரை நடத்தவில்லையென உயிரிழந்த பெண்ணின் கணவர் மேலும் குற்றம் சுமந்தியுள்ளார்.