காணாமல் போனவர்கள் தொடர்பாக இலங்கை அரசு அக்கறையீனமாகப் பதிலளிப்பதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டு, காணாமல் போன தமது உறவுகளை மறப்பதற்குத் தயாராக இல்லை. விசாரணைகள் செய்யப்பட்டு அவர்களுக்கு என்ன? நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ளாமல், காணாமல் போய்விட்டார்கள் என்ற சான்றிதழைப் பெற்றுக்கொள்ளவும் தமிழ் மக்கள் தயாராக இல்லை.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில்,தமிழ் மக்கள், காலத்துக்குக் காலம் தமது உறவுகளைத் தொலைத்திருக்கின்றார்கள்.
காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது, என்பது தொடர்பாக காலத்துக்குக் காலம் அரசாங்கங்கள் அமைத்த விசாரணை ஆணைக்குழுக்கள் முன்னிலையிலும், சர்வதேச விசாரணையாளர்களிடமும் அழுகையும் கண்ணீருமாக தமது முறைப்பாடுகளை பதிவு செய்திருக்கின்றார்கள்.
அவ்வாறு செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு அந்த ஆணைக்குழுக்களோ, சர்வதேச அமைப்புக்களோ ஆக்கபூர்வமான பதில் எதையும் இதுவரை வழங்கவில்லை. சில காலம் காணாமல் போனவர்களின் உறவுகளை வீதியில் இறக்கி ஆர்ப்பாட்டங்களையும், விழிப்புணர்வுப் போராட்டங்களையும் பலர் நடத்தியிருக்கின்றார்கள்.
தற்போதைய சூழலில் தமிழ் மக்களை வெகுஜன போராட்ட வடிவத்தில் வீதிக்கு அழைக்க முற்பட்டவர்களுக்கு தமிழ் மக்களை அழைக்கும் கவர்ச்சியான கோசங்கள் எதுவும் இருக்கவில்லை. ஆகவே காணாமல் போனவர்களின் உறவுகளையும், தாம் பூர்வீகமாக வாழ்ந்த காணி நிலத்தை மீளவும் தமக்கே தரவேண்டும் என்று பல வருடங்களாக ஏங்கிக் கொண்டு இருக்கும் மக்களையுமே வெகுஜன போராட்டங்களை நோக்கி அணி திரட்டக் கூடியதாக இருந்தது.
காணாமல் போனவர்களை முன்னிறுத்தி அவர்களுக்காக குரல் கொடுப்பதாக கூறி தமது அரசியலை முன்னெடுத்தவர்களும், தொடர்ந்தும் அவ்விதமான போராட்டங்களை முன்னெடுக்க முடியாமல் ஒதுங்கிப் பொய்விட்டார்கள். இந்த நிலையில் தமக்கான நியாயங்களுக்காக தாமே போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் இப்போது காணாமல் போனவர்களின் உறவுகள் தாமே போராட்டங்களை முன்னெடுப்பதற்குத் துணிந்து விட்டார்கள்.
ஆனாலும் காணாமல் போனவர்களின் பிரச்சினை தொடர்பாக ஒரு தீர்வைப் பெற்றுத் தருவதாக நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற ஆதங்கமும் இருக்கவே செய்கின்றது.
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், காணாமல் போனவர்களின் விடயத்தையும், சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கட்சிகளின் விடுதலை தொடர்பாகவும் உரியவாறு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கவில்லை என்பதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு எதிரான போராட்டங்களை நடத்தியும், எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனின் உருவப்படத்தை எரித்தும் தமது எதிர்ப்பை வெளிக்காட்டினார்கள்.
அதற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் பதிலளிக்காத நிலையில், சாகும்வரை உண்ணாவிரதமிருப்பது என்று முடிவு செய்ததன் விளைவாகவே வவுனியாவில் தமது போராட்டத்தை தொடங்கினார்கள். வவுனியாவில் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதும், திருகோணமலையிலும் காணாமல் போனவர்களின் உறவுகள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியிருந்தார்கள்.
அதைத் தொடர்ந்து சிறைகளில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளும் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தைத் நடத்தியிருந்தார்கள். இத்தனைக்குப் பிறகும்கூட சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கம் மக்களின் போராட்டத்தை தமிழ்த் தேசியக் கட்சியும், அரசாங்கமும் கவனத்தில் எடுத்திருக்கவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதனும், சிவசக்தி ஆனந்தனும் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்கள்.
அந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்கள் தனித் தனியாக கலந்து கொள்ளாமல், கூட்டாகக் கலந்து கொண்டு அந்த மக்களுக்கு ஒரு தீர்வு கிடைப்பதற்கு குரல் கொடுத்திருக்க வேண்டும். அல்லது ஆரம்பிக்கப்பட்டிருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தை தெளிவுபடுத்தி கொழும்பில் அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஒரு தீர்வோடு வவுனியாவுக்கு வந்து மக்களை ஆறுதல் படுத்தியிருக்க வேண்டும் என்றே மக்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.
அவ்வாறு செய்யாமல் உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ் கட்சிகளும் கலந்து கொண்டு சில மணித்தியாலங்கள் இருந்து கொண்டு எழுந்து செல்வதானது, உண்ணாவிரதப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகவும், அதை ஒரு அரசியல் மேடையாகப் பயன்படுத்துவதாகவுமே இருக்கும். அத்தகைய செயற்பாடானது உண்ணாவிரதப் போராட்டத்திற்கு எதிர்பார்த்த பலனைப் பெற்றுத் தராது என்றே தமிழ் மக்கள் கூறினார்கள்.
உண்ணாவிரதப் போராட்டம் மூன்று நாட்களைக் கடந்து அதில் பங்கு கொண்டிருந்தவர்களின் உடல் நிலை மெல்ல மோசமடைய ஆரம்பித்திருந்த நிலையிலேயே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர் சுவாமிநாதனை வவுனியாவுக்கு அனுப்பி உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் நடவடிக்கையை எடுத்தார்.
அமைச்சர் சுவாமிநாதன் வருகை தருவதையும், அவர் வாக்குறுதிகள் தருவதையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் விரும்பவில்லை. தமிழ் மக்களைப் பொறுத்தவரை அமைச்சர் சுவாமிநாதன் என்பவர் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் உணர்வுகளையும், வலிகளையும் அனுபவித்தவரோ, உணர்வு ரீதியாக உணர்ந்தவரோ இல்லை என்பதால் அவரால் தாம் எதிர்பார்க்கும் தீர்வைப் பெற்றுத் தரமுடியாது. அவர் அரசாங்கத்தின் ஒரு முகவராக அரசுக்குத் தோதான பதிலையே வழங்கக் கூடியவர் என்ற ஒரு அபிப்பிராயமே தமிழ் மக்களிடம் மேலோங்கி இருக்கின்றது.
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனோ, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனோ நேரடியாகச் சென்று உண்ணாவிரதமிருந்த மக்களுக்கு வாக்குறுதியை வழங்குவதற்கான கால அவகாசமும் கடந்துவிட்டிருந்த நிலையில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ராஜபக்சவை அனுப்பி அந்த மக்களுக்கு ஒரு வாக்குறுதியை வழங்குவதற்கான பிரதமரின் யோசனையை உண்ணாவிரதமிருந்தவர்கள் ஏற்றுக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டது.
அதையும் ஏற்காமல் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்வதாக இருந்திருந்திருந்தால்,அது தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கு மாறாக சில உயிர்களை பலி கொடுப்பதாகவே அமைந்திருக்கும்.
எதிர்வரும் ஒன்பதாம் திகதி அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மற்றும் துறைசார்ந்த நிபுணர்களையும் அழைத்து பிரதமர் உயர் மட்டக் கூட்டம் ஒன்றை நடத்தி, காணாமல் போனோர் விவகாரம், எல்லை நிர்ணயம் தொடர்பான சர்ச்சைகள் போன்ற பல முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளார் என்று அரசு கூறியிருக்கின்றது.
இதற்கிடையே காணாமல் போனவர்கள் தொடர்பாக பகிரங்கமான விசாரணையை மேற்கொண்டு அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை ஆராய்வதற்கு தற்போதைய அரசாங்கமும் தயாராக இல்லை. அதற்குக் காரணம், காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் 90 வீதமானவை அரச படைகள் மீதே சுமத்தப்பட்டுள்ளது.
எனவே காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை அரசாங்கம் முன்னெடுக்குமாக இருந்தால், அது இலங்கைப் படைகளையே குற்றவாளிகளாக சட்டத்தின் முன்பாக நிறுத்தவேண்டியிருக்கும். அவ்வாறு படையினரைக் குற்றவாளிகளாக நிறுத்தினால், அது அரசுக்கு எதிராக படையினர் ஒரு இராணுவப் புரட்சியை ஆரம்பிக்கவும், சிங்கள மக்கள் அரசுக்கு எதிராக கிளர்ச்சியை முன்னெடுக்கவும் வாய்ப்பு ஏற்படலாம் என்ற அச்சம் அரசாங்கத்திற்கு இருக்கின்றது.
ஆகவேதான், காணாமல் போனவர்கள் நாட்டில் இல்லை என்றும், அவர்கள் வெளி நாடுகளுக்குச் சென்றிருக்கலாம் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். பிரதமரின் இந்தக் கருத்தை அனைத்து தமிழ் மக்களும் கடுமையாக கண்டித்திருந்தார்கள்.
காணாமல் போன சம்பவங்கள் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்திலேயே நடத்தன,ஆகையால் அவர்களுக்கு என்ன நடத்தது என்று எமக்கு தெரியாது என்றும் கையை விரித்து தப்பித்துக் கொள்ளவே நல்லாட்சி அரசாங்கம் முயற்சிக்கின்றது. மஹிந்த ஆட்சிக்காலத்தில் நடந்த பிரச்சினைகளுக்கு நல்லாட்சி அரசாங்கத்தினரால் தீர்வு தர முடியாது என்றால், மஹிந்த ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல், மோசடிகள், தொடர்பாகவும் நல்லாட்சி அரசாங்கம் கண்டு கொள்ளாமல் கைவிட்டிருக்க வேண்டும்.
அவ்வாறு செய்யாமல் மோசடி, ஊழல் என்பவற்றை மிகுந்த அக்கறையோடு விசாரணை செய்தும், அதற்காக சிலரை சிறைகளில் அடைப்பதுமாக நடவடிக்கைகள் நகர்ந்துகொண்டு இருக்கின்றன.
காரணம், இவ்வாறு செய்வதனால் நடந்துகொண்டிருக்கின்ற அரசியல் சதுரங்கத்தில் முன்நோக்கி நகர்வதற்கான வாய்ப்புக்ளை அதிகரித்துக் கொள்ள முடியும்.
அதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் கரிசனை காட்டினால், ஆட்டத்தில் பின்னடைவுளே ஏற்படும். சிங்கள மக்கள் மத்தியில் மஹிந்த அணியினர் கூறிவருகின்ற கதைகளுக்கு வலு அதிகரித்துவிடும்.
எனவே, காணாமல் ஆக்கபட்டவர்கள் தொடர்ச்சியாக போராடுகின்றார்கள் – தழிழ் தலைமைகள் அழுத்தம் கொடுக்கின்றன. – சர்வதேச நாடுகள் கேள்வி கேட்கின்றன – நல்லாட்சி என்பதை நடைமுறையில் நிறுவ வேண்டும் போன்ற எந்தவொரு காரணத்திற்காகவும், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நியாயமாக செயற்பட மைத்திரி – ரணில் கூட்டணி தயாரில்லை என்பதுதான் யதார்த்தம்!