புதிய தேசிய பாதுகாப்புச் சட்டவரைவை எதிர்வரும் பெப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாதத்தில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அரசு தீர்மானித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாகப் புதிய சட்டமொன்றை கொண்டு வருவது குறித்த கலந்துரையாடல் ஒன்று கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது என்று அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது எனக் கூறப்படுகின்றது.
இந்தச் சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உட்பட தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய முக்கிய பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
நீண்ட கலந்துரையாடலின் பின்னரே இவ்வாறு புதிய தேசிய பாதுகாப்புச் சட்டமொன்று கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
1978ஆம் ஆண்டு அரசமைப்பில் அறிமுகம் செய்யப்பட்ட பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டமே தற்போது நடைமுறையில் உள்ளது.
கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்த இந்தச் சட்டத்தை மாற்றி புதிய சட்டமொன்றைக் கொண்டுவரும்படி தமிழ் அரசியல் தலைமைகள் பலமுறை கோரியும் அரசு அதனைக் கண்டுகொள்ளவில்லை.
தேசிய அரசு இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் என்று வாக்குறுதியளித்திருந்தது. என்றாலும், அரசு ஆட்சிப்பீடமேறி இரண்டு வருடங்கள் கடந்த போதிலும் இந்தச் சட்டத்தை மாற்றியமைக்க எவ்வித முயற்சியையும் மேற்கொண்டிருக்கவில்லை.
தற்போது ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்குக் கிடைக்க ஐரோப்பிய ஆணைக் குழுவால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சலுகையை அரசு பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் கட்டாயம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றிப் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டமொன்று கொண்டுவரப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு நிபந்தனை விதித்துள்ளது.
அதன் அடிப்படையில் தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாகப் புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. இந்தச் சட்டம் தொடர்பான வரைவை எதிர்வரும் பெப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாத்தில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கக்கக் கூடிய வாய்ப்புள்ளது எனவும் அறியமுடிந்தது.