ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு உறுதியானது. வரும் ஞாயிறு அன்று ஜப்பான் அணியை இந்தியா எதிர்கொள்ள இருக்கிறது.
வங்கதேசம் தலைநகர் டாக்காவில் ஆண்களுக்கான ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் தென் கொரியா அணியை எதிர்கொண்ட இந்திய அணி 2-2 என்ற கோல் கணக்கில் ட்ரா செய்தது.
அதற்கு அடுத்த ஆட்டத்தில் வங்கதேசத்துடன் மோதிய இந்திய அணி 9-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.
அதை தொடர்ந்து நேற்று பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் இந்திய அணி 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று 7 புள்ளிகளுடன் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.
இதையடுத்து நாளை (19.12.2021) நடைபெறவுள்ள போட்டியில் இந்திய அணி, ஜப்பானுடன் மோதுகிறது. இறுதியாக இந்த இரு அணிகளும் நடந்து முடிந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் கால் இறுதி போட்டியில் மோதின. அந்த போட்டியில் இந்திய அணி 5-3 என்ற கோல்கள் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. இந்நிலையில் தற்போது மீண்டும் இரு அணிகளும் மோதவுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.