கேவியர் நிறுவனம் புல்லட் புரூஃப் வசதி கொண்ட ஐபோன் 13 சீரிஸ் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.
ஐபோன்களை மாற்றியமைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வரும் கேவியர் நிறுவனம், தற்போது ஐபோன் 13-இல் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி இந்த மாடல்கள் ஸ்டெல்த் 2.0 என அழைக்கப்படுகின்றன. இவை ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் கிடைக்கின்றன.
ஸ்டெல்த் 2.0 சீரிஸ் ஐபோன்கள் பி.ஆர்.2 கிளாஸ் 2 புல்லட்புரூஃப் ஆர்மர் கொண்டுள்ளது. இது துப்பாக்கி தோட்டாக்களை தடுத்து நிறுத்தும் அளவு உறுதித்தன்மை கொண்டவை ஆகும். இதனை என்.பி.ஒ.டி.சி.ஐ.டி. எனும் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. இந்த நிறுவனம் போர் ஹெலிகாப்டர்கள் மற்றும் பாதுகாப்பு வாகனங்களை உருவாக்கி வருகிறது.
ஸ்டெல்த் 2.0 மாடல்களில் எந்த கேமராவும் இருக்காது, என்பதால் பேஸ் ஐடி அம்சம் பயனற்று போகும். இதன் காரணமாக இந்த மாடல்களில் எவ்வித பயோமெட்ரிக் பாதுகாப்பும் இருக்காது. இந்த போன்களை கேமராக்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கும் பகுதிகளில் பயன்படுத்தலாம் என கேவியர் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
புல்லட் புரூஃப் ஐபோன் பெயருக்கு ஏற்றார் போல் தோட்டாக்களை உண்மையில் தடுத்து நிறுத்துகிறது. எனினும், தோட்டாக்களை எதிர்கொண்ட பின் ஐபோன் செயலற்று போகிவிடுகிறது. ஐபோன் செயலற்று போனாலும், துப்பாக்கி தாக்குதல் போன்ற ஆபத்து காலத்தில் ஒருவரின் உயிரை காப்பாற்றுகிறது. இந்த ஐபோன் மொத்தத்தில் 99 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.
ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் அதிகபட்சம் 1 டி.பி. மெமரி ஆப்ஷனை பயனர்கள் தேர்வு செய்யலாம். இதன் துவக்க விலை இந்திய மதிப்பில் ரூ. 4.85 லட்சம் என துவங்கி டாப் எண்ட் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் 1 டி.பி. மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 6.07 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.