தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையில் எந்தவோர் இரகசிய ஒப்பந்தமும இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மனம் திறந்து பேசினால் அரசியல் தீர்வு தொடர்பில் ஒரு முடிவுக்கு வரமுடியும்.
நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், தெற்கை குழப்பி ஒருபோதும் வடக்குக்குத் தீர்வைக் கொடுக்க முடியாது.
அது நிலையான தீர்வாக அமையாது என்று தமிழ்த் தலைவர்கள் என்னிடம் கூறியுள்ளனர். தெற்கின் இணக்கத்துடனேயே அவர்கள் வடக்குக்கான தீர்வை எதிர்பார்க்கின்றனர்.
வடக்கும் தெற்கும் ஒன்றிணைந்தே செயற்பட வேண்டும். வடக்கு மக்களின் பிரச்சினைகளை அறிந்து அவர்களுடன் இணைந்து அபிவிருத்தி செய்தால் அவர்களின் மனங்களை வெற்றிகொள்ளலாம்.
மாறாக, அவர்கள் விரும்பாத – அவர்களுக்குத் தேவையில்லாத அபிவிருத்திகளை நாம் அவர்களிடம் திணிக்கக்கூடாது. இப்படிப் போனால் நிச்சயம் இனவாதத்தை ஒழிக்கலாம்.
ஆகக்குறைந்தது பரீச்சாத்தமாக இப்படி ஒரு வருடமாவது செய்து பார்ப்போம். நிச்சயம் மாற்றத்தைக் காணமுடியும். அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நாம் மனம் திறந்து பேச வேண்டும்.
நல்ல பயனைப் பெறலாம். தமிழ்த் கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையில் நான் அறிந்தவரை எந்தவோர் இரகசிய ஒப்பந்தமும் கிடையாது. குறுகிய அரசியல் இலாபத்துக்காக நாம் பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தக்கூடாது.
இனியொரு யுத்தம் செய்யமுடியாது இனவாதத்தைத் தூண்ட முடியாது. நல்லிணக்கம் ஊடாகவும் நல்ல அபிவிருத்திகளின் ஊடாகவுமே இந்த நாட்டை அபிவிருத்தி செய்யமுடியும். அந்த அபிவிருத்தியில் இருந்து வடக்கைப் புறந்தள்ளி முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.