சென்னையில் அந்தரங்க புகைப்படங்களைக் காட்டி மிரட்டிய கல்லூரி மாணவனை தீர்த்துக்கட்டிய சிறுமிகள் சென்னையில் தான் எடுத்த அந்தரங்க புகைப்படத்தைப் பயன்படுத்தி, சிறுமிகளை மிரட்டிய 21 வயது கல்லூரி மாணவர் கொலை வழக்கில் செங்கல்பட்டைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிகள் 2 பேரை ஆரம்பாக்கம் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
ஓட்டேரியைச் சேர்ந்த பிரேம்குமாரின் உடல், ஞாயிற்றுக்கிழமை திருவள்ளூர் ஈச்சங்காடு கிராமத்தில் புதைக்கப்பட்ட நிலையில், வெறிச்சோடிய இடத்தில் முடி மற்றும் இரத்தம் தோய்ந்த பற்களைக் கண்ட கிராம மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இது குறித்து கடந்த ஆண்டு பிரேம்குமாருக்கு தலா ரூ. 50,000 செலுத்திய இரண்டு சிறுமிகளிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகின. கொலை செய்யப்பட்ட பிரேம்குமார், இன்ஸ்டாகிராம் மூலம் சம்பந்தப்பட்ட சிறுமிகளிடம் நட்பாகப் பழகியுள்ளான்.
ஆனால் சிறுமிகள் இருவருக்கும் தாங்கள் பேசுவது ஒரே நபர் தான் என்பது தெரியாது. இந்தப் பழக்கம் நாளடைவில் விபரீதமாக மாறியது.
பிரேம்குமார் தன்னிடம் உள்ள சிறுமிகளின் அந்தரங்க புகைப்படங்களைக் காட்டி அவர்களை மிரட்டியுள்ளான். பல நேரங்களில் அவர்களிடம் பணம் கேட்டு, தரவில்லை யென்றால் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவதாக அழுத்தம் கொடுத்துள்ளான்.
ஒரளவுக்கு மேல் இதை பொறுக்க முடியாத சிறுமிகள் இருவரும், இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் நட்பாக இருந்த மற்றொரு இளைஞரான அசோக்கிடம், பிரேம்குமாரின் போனை பறிக்கவும், புகைப்படங்களை நீக்கவும் உதவுமாறு கேட்டுள்ளனர்.
ரெட் ஹில்ஸைச் சேர்ந்த அசோக் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் பிரேம்குமாரைக் கவர சிறுமிகளை பயன்படுத்தி, வெள்ளிக்கிழமை காலை சோழவரம் சுங்கச்சாவடிக்கு அவனைக் கடத்திச் சென்றதாக போலீஸார் தெரிவித்தனர்.
அன்றிரவு அசோக்கும் மற்றொரு நண்பரும் பிரேம்குமாரை ஈச்சங்காடுக்கு அழைத்துச் சென்று அங்கு கொலை செய்து புதைத்துள்ளனர். “நாங்கள் அசோக்கை தேட ஆரம்பித்துள்ளோம். அவரைப் பிடித்த பிறகுதான் என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியும்” என்று விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பிரேம்குமாரின் உடல் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது குடும்பத்தினரிடம் திங்கட்கிழமை ஒப்படைக்கப்பட்டது.