சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் கணவனை கொன்று, உடலை மறைத்து வைத்த மனைவியையும், கள்ளக்காதலனையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
தேசிய புனரமைப்பு காலனி பகுதியை சேர்ந்தவர் சேதுபதி. கூலித்தொழிலாளியான இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்றைய தினம் இரவு இவரது வீட்டில் இருந்து துற்நாற்றம் வீசியுள்ளது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டதில், பிரியாவின் வீட்டில் தண்ணீர் ஊற்றி வைப்பதற்காக இருந்த பிளாஸ்டிக் பேரலில் இருந்து துற்நாற்றம் வீசுவது கண்டுபிடிக்கப்பட்டு, அதனை திறந்து பார்த்தபோது, அதில் சேதுபதியின் சடலம் அழுகிய நிலையில் இருந்துள்ளது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பிரியா முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்துள்ளார். சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
பிரியாவும், சேதுபதியும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 வயதில் ஒரு குழந்தையும், 10 மாதத்தில் ஒரு குழந்தையும் உள்ளனர். கூலி வேலை செய்து வரும் சேதுபதி கூலிவேலைக்காக வெளியூர் சென்று வருவார். கடந்த சில மாதங்களாக சேதுபதி கூலி பணத்தை வீட்டிற்கு கொடுக்காமல் மது அருந்திவந்துள்ளார்.
இந்த நிலையில், பிரியாவுக்கும், பக்கத்து வீட்டில் வசித்து வரும் சதீஷ்குமார் என்பவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்களது கள்ளத்தொடர்புக்கு சேதுபதி இடையூறாக இருப்பதால் அவரை கொலை செய்து பிளாஸ்டிக் பரலில் அடைத்து வைத்து பின்னர் யாருக்கும் தெரியாமல் அப்புறப்படுத்திவிட திட்டமிட்டிருந்தனர்.
நேற்று இரவு இருவரும் சேர்ந்து பரலை வெளியே எடுத்துசெல்ல முயன்றபோது, அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, கிச்சிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது பரலில் சேதுபதியின் சடலம் இருப்பதை உறுதி செய்தனர். அழுகிய நிலையில் இருந்த சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு சென்றனர்.
பிரியா கொடுத்த தகவலின் அடிப்படையில், சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். இருவரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.