இனிய மாணவ நண்பர்களே..நான் நயன்தாரா. உங்களால் வளர்ந்தவள். உங்களால் வாழ்பவள். நீங்கள் கொடுத்த காசில் தான் நானும் நடிகர்களும்.
பீட்டாவை ஓட ஓட விரட்டுவதில் நானும், விக்கியும் என்றும் உங்கள் பின்னால் நிற்போம்.
நானும் உங்களோடு போராட்டத்தில் இருந்தவள் என்பதால் உரிமையோடு நான்கு கோரிக்கை வைக்கிறேன்.
செய்வீர்களா மாணவர்களே..? செய்வீர்கள். நம்புகிறேன். நாடே நம்புகிறது.
4 வகையான பணிகளை சாதித்தால், தமிழக விவசாயம், உலக அரங்கில் முன்னுதாரணமாக பேசப்படும் காலம் உருவாகும்.
1. மழைதரும் 100 கோடி மரங்கள் தேவை.
—————————————————–
மேகத்தை குளிர்வித்து மழையாக ஈர்க்கும் மந்திர சக்தி மரங்களுக்கு மட்டுமே உண்டு. இஸ்ரேலியப் பாலைவனத்தை பசுமையாக்கிட அவர்கள் செய்த முதல் வேலை, மரங்கள் நடும் மாபெரும் தேசிய இயக்கத்தை நடத்தியதுதான்.
20 ஆயிரம் சதுர கிலோமீட்டர் கொண்ட அந்த நாட்டில், 25 கோடி மரங்கள் புதிதாக நட்டு வளர்க்கப்பட்டதால், அந்தப் பாலைமண் பூமியில் இப்போது ஆப்பிளும், தக்காளியும் நம்மைவிடப் பல மடங்கு விளைகிறது.
ஆனால் நாம், நம்மிடம் இருந்த பசுமை மாறாக் காடுகளை அழித்து எஸ்டேட்டுகளாகவும், சாமியார் மடங்களாகவும், தார்ச் சாலைகளாகவும் மாற்றிவிட்டோம். 1,30,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட தமிழ்நாட்டுக்கு மழைதரும் 100 கோடி மரங்கள் தேவை.
நமது இளைஞர்கள் களம் இறங்கினால், நமது 17,000 கிராமங்களில் ஒரு கிராமத்துக்கு 60,000 மரங்கள் வீதம் மழைதரும் மரங்களை நட்டு வளர்த்து 100 கோடி மரங்கள் வளர்ப்பது 100 சதம் சாத்தியமே.
வேலிக்கருவை என்ற நச்சுமரத்தை அப்புறப்படுத்தி, வேம்பு, மலைவேம்பு, புளி, பூவரசு, புங்கன், தேக்கு, செம்மரம், சந்தனம், செஞ்சந்தனம், சவுண்டல் உள்ளிட்ட மழைதரும் மரங்களை அதிகம் வளர்க்க வேண்டும்.
இந்த 100 கோடி இலக்கினை சாதித்தால், ஒவ்வொரு ஆண்டும் நாம் தண்ணீருக்காக கர்நாடகத்திடமும், கேரளத்திடமும் கையேந்தும் நிலைமை ஒருபோதும் வராது. விவசாயிகள் வானத்தை வெறித்துப் பார்த்து பெருமூச்சுவிடும் நிலைமை முற்றிலும் மாறிவிடும். மாதம் மும்மாரி பொழிவது இயற்கை நியதியாக மாறிவிடும்.
2. நீராதாரங்கள் பாதுகாப்பு
———————————-
தொழில்நுட்ப அறிவு பற்றி மேலைநாடுகளில் பேசப்படுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே, வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகிற நதியின் குறுக்கே பிரமாண்ட அணையைக் கட்டும் தொழில்நுட்ப அறிவை செயலில் காட்டி சாதித்தவன் தமிழன்.
நீராதாரங்களை கூறுபோட்டுவிற்கும் கொலைபாதகர்களால்தான் நமது விவசாயம் சின்னாபின்னமானது. இருக்கிற ஏரிகள், குளங்கள், தடுப்பணைகள் கால்வாய்களை போற்றிக் காப்பதையும், புதியனவற்றை சாத்தியமான அளவில் உருவாக்குவதையும் இளைய தலைமுறை தனது கடமையாக தோளில் ஏற்கட்டும்.
3. பல்லுயிர் சூழல் விவசாயத்தை மீண்டும் மலரச் செய்வோம்.
—————————————————————————
ஜல்லிக்கட்டு நமது முன்னோரின் வீர விளையாட்டாக இருந்தது உண்மை. அவர்கள் வாழ்வில் காளைகள் மட்டும் அல்ல – பசுக்கள், எருமைகள், ஆடுகள், முயல்கள், பன்றிகள், கோழிகள், கிளிகள், குருவிகள், புறாக்கள், மீன்கள், வண்ணத்துப் பூச்சிகள், தட்டான்கள், மண்புழுக்கள் என பல்லுயிர் சூழ்ந்த வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்தனர்.
இன்றைய விவசாயம் மீண்டும் பல்லுயிர் சூழ்ந்த விவசாயமாக மாறவேண்டும். அப்போதுதான் மலடாகிப்போன மண், மீண்டும் உயிர்பெற்று அதிக விளைச்சலை அள்ளித்தரும்.
பல்லுயிர் சூழ்ந்த விவசாயத்தின் ஓர் அடையாளமாக நமது முன்னோரின் ஏறு தழுவுதல் வீர விளையாட்டு இருந்தது என்று பெருமை கொள்வோம். அதற்காக இன்றைய கணினி யுக இளைஞர்கள் ஏறு தழுவுதல் வீர விளையாட்டில் இறங்கி ஒருகை பார்க்கவேண்டும் என்று சிந்திப்பது அறியாமை.
கணினி யுக இளைஞர்களில் வாய்ப்புள்ளவர்கள், பல்லுயிர் சூழ்ந்த விவசாயத்தில் ஈடுபடலாம். நாட்டுமாடு, நாட்டு ஆடு, நாட்டுக் கோழி வளர்ப்பதை பெரும் தொழிலாக செய்யலாம்.
4. ஆலைத் தொழில்போல், திட்டமிடப்பட்ட விவசாயம்
——————————————————————–
முதல் மூன்று பணிகளால் தண்ணீரும், மண் வளமும் உறுதிசெய்யப்பட்டு உயர் விளைச்சல் சாத்தியமாகும். ஆனால், அதிகமாக விளைந்த தக்காளியும், வெங்காயமும், வாழைக்காயும் சாலைகளில் கொட்டப்படுவது போன்ற நிலைமைகள் இனி வரவே கூடாது.
தமிழக விவசாயத்தில் உண்மையான புரட்சியை சாத்தியமாக்கும் இந்த 4 மகத்தான பணிகளையும் எந்த அரசாங்கமும் தானே செய்யாது. அதற்குரிய அக்கறையும் மனத்துணிவும் இளைய சக்தியிடம் பீறிட்டுக் கிளம்பினால் மட்டுமே இவை சாத்தியம்.
அன்பு இளவல்களே,
————————
ஜல்லிக்கட்டு ஆதரவு என்ற அடையாள போராட்டத்தில் நீங்கள் முடங்கிவிடவேண்டாம். பண்டிகைகால நிகழ்வுகள்போல் உங்கள் உணர்வுகள் முனைமழுங்கிப் போகவேண்டாம்.
நமது கிராமங்கள் மீதும், மாடுகளோடு பின்னிப் பிணைந்த நமது பாரம்பரிய விவசாயம் மீதும் நீங்கள் கொண்டுள்ள அக்கறையை மேலும் வளர்த்தெடுங்கள். மேலே சொன்ன நான்கு விதமான பணிகளில் எது முதலில் சாத்தியமோ முதலில் அதைத் தொடங்குங்கள்.
இதுதான் உங்கள் சகோதரியாக நான் உங்களிடம் வேண்டுவது. இனியும் தமிழகத்தில் மாணவ நண்பர்கள் எந்த போராட்டத்தில் இறங்கினாலும் அங்கு நாங்களும் இருப்போம்.
உங்கள் நயன்தாரா.