அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் அடுத்தடுத்து எடுக்கும் நடவடிக்கைகளால், உலக நாடுகள் அமெரிக்காவின் செயற்பாடுகள் குறித்து மிக அவதானமாக கண்காணித்துவருகின்றன.
அமெரிக்காவின் பொருளாதாரம், வெளிநாட்டுக் கொள்கைகளில் ஏற்படும் தாக்கம் ஏனைய நாடுகளையும் வெகுவிரைவில் தாக்கிவிடும்.
இந்நிலையில், லிபியா, துருக்கி உட்பட்ட ஏழு நாட்டவர்கள் அமெரிக்காவிற்குள் உள்நுழைவதற்கான விசா வழங்கப்படாது என்னும் ஒப்பந்தத்தில் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருப்பதுடன், மற்ற நாட்டுத் தலைவர்கள் இந்த முடிவை கடுமையாக விமர்சித்து வருகின்றார்கள்.
இதேவேளை, அமெரிக்காவிற்குள் குடியேறியிருக்கும், குடியேற்றவாசிகளை வெளியேற்றுவது தொடர்பிலும், அவர் ஆலோசித்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஈழத்தில் இருந்து அடுத்த தலைமை முறையினர் அமெரிக்காவிற்கு கடிதம் எழுதினால் எப்படியிருக்கும் என்று சிந்தித்தோம்.
அதன்படி, இப்படியொரு கடிதம் தயாரானது,
வல்லாதிக்க சக்தியாகவும், நீங்கள் நினைப்பதை தான் மற்றைய நாடுகள் செயற்படுத்த வேண்டும் என்றும் நினைக்கும் உங்கள் அதிகார நாட்டிற்காக ஒரு சிறு கடிதம் தான் இது.
ஈழத்தின் சிறுமியாக இருந்து கொண்டு உங்களுக்கான கடிதத்தை இப்படி வரைகிறேன்.
அமெரிக்காவிற்குள் குடியேறியிருக்கும் மற்றைய நாட்டவர்களை வெளியேற்ற வேண்டும் என நீங்கள் தெரிவித்திருக்கிறீர்கள்.
ஆனால், சில வரலாற்று உண்மைகளை நீங்கள் அறிவீர்களா? அமெரிக்காவில் இருக்கும் நீங்கள் அத்தனை பேரும் அமெரிக்காவின் குடிமக்கள் தானா?
இற்றைக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் உங்கள் மூத்த தலைமுறையினர் குடியேறினர்.
அவர்களின் வழித்தோற்றல்கள் தான் நீங்கள். செவ்விந்தியர்களின் பூர்வீகத் தாயகமாக கொண்ட நாட்டில் அவர்களை அழித்தொழித்துவிட்டுத் தான் இப்பொழுது நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்கும் வரை அங்கே அமெரிக்கர்கள் என்று எவரும் இருந்ததில்லை. அமெரிக்கா என்று பெயரும் இருக்கவில்லை.
அமெரிக்கோ வெஸ்புக்கி என்ற நாடுகாண் பயணி சென்றதனால் தான் அதற்கு அமெரிக்கா என்று பெயர் வந்ததாகவும் வரலாறு கூறுகிறது.
பின்னர், ஐரோப்பியர்கள், பிரித்தானியர்கள் போன்றோர் அங்கே குடியேறியதனால் அமெரிக்கா என்னும் நாடு வளர்ச்சி அடைந்தது.
முன்னதாக ஜேர்ஐ் வொசிங்டன் தலைமையிலான குழுவொன்று பிரித்தானியா அதாவது தன் தாய்நாட்டிற்கு எதிராக போராடி வென்றது.
இதன் பின்னரே தற்போதைய அமெரிக்கா உருவானது. குடியேற்றவாசிகளின் கூடாரமாகவே அமெரிக்கா தோன்றியது.
இன்றைய நவீன அமெரிக்கா ஆபிரிக்க அடிமைகளின் உழைப்பினாலும், வேர்வையினாலும் உருவானது என்பதை உலகம் அறியும்.
அப்படியிருக்கும் பொழுது குடியேற்றவாசிகள் குறித்து நீங்கள் பேசுவது அவ்வளவுக்கு ஏற்புடையது அல்ல என்பதை சற்று சிந்திக்கப்பார்க்கவேண்டும்.
ஈழத்தில் இருந்து கொண்டு, குடியேற்றவாசிகள் குறித்து அடுத்த தலைமுறைச் சிறுமி நான் பேசுவதற்கான காரணமும் உண்டு.
ஈழம் என்ற நமது பூர்வீக நிலத்தில் நீண்டகாலமாக வாழமுடியாமல், வேறு நாடுகளுக்கு குடியேறியிருக்கிறார்கள் தமிழர்கள்.
இதேபோல, ஈழத்தினை பூர்வீகமாகக் கொண்டவர்கள் கூட சொந்த நாட்டில் இன்றும் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்று நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும், இலங்கை அரசாங்கத்திற்கு, சாதக, பாதக தன்மைகளை ஏற்படுத்திக் கொடுக்கும்.
மூத்த குடிகளான தமிழர்களை வந்தேறு குடிகள் என்று கூறும் இலங்கை அரசாங்கத்திற்கு இது பெரும் சாதகத் தன்மையை கொடுக்கும் என்பதோடு, நாடு நாளை பேரினவாதிகளின் கையில் சென்றால் எமக்கான நிலை என்ன?
உங்கள் செயற்பாட்டை உதாரணம் காட்டி இலங்கை அரசாங்கம் செயற்படாது என்பது என்ன நிச்சயம்?
இன்று சொந்த நாட்டில் தொடரும் சோகங்களால் நாங்கள் துவண்டுகொண்டிருக்கிறோம்.
உங்கள் நாட்டில் ஏற்படும் மாற்றங்களினால், வளர்ந்துவரும் ஆசிய நாடுகள் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கும். அதன் விளைவுகள் நேரடியாக அனைவரையும் தாக்கும்.
“ யாதும் ஊரே யாவரும் கேளீர் ” என்று சங்கப் புலவர் கனியன் பூங்கன்றனார் எடுத்துரைக்கிறார். இதை ஐக்கிய நாடுகள் சபையிலும் பொறிக்கப்பட்டிருக்கிறது.
அவ்வாறிருக்கு, நாடுகளைப் பிரித்து, இது அமெரிக்கர்களுக்குச் சொந்தமானது என்று கூறி மற்றவர்களைத் திருப்பி அனுப்ப முயற்சிப்பது அபத்தமானது.
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதை பின்பற்றுங்கள். வந்தேறிகளின் கூடாரம் தான் அமெரிக்கா என்பதை உலகம் அறியும். பின்னர் எதற்கு இந்த வம்பு.
முன்னைய ஜனாதிபதி ஒபாமாவின் செயற்பாடுகளை கொஞ்சம் அவதானியுங்கள். சிந்தித்துச் செயலாற்றுங்கள். உங்கள் உள்நாட்டுப் பிரச்சினை சர்வதேச மக்களின் வயிற்றில் அடிப்பதைப் போன்றாகிவிடக் கூடாது.
நன்றி