எவ்வளவு பணி அழுத்தமிருந்தாலும், மற்றவர்களை கொலை செய்ய எவருக்கும் உரிமை இல்லை. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை T-56 துப்பாக்கியால் பொலிஸ் சார்ஜன்ட் சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
பொலிஸ் சார்ஜன்ட் விடுமுறையை கோரியதாகவும், விடுமுறை வழங்கப்படாததால் கடுமையான மனஅழுத்தத்திற்கு உள்ளாகியிருந்ததாகவும், அவரது தாயார் தெரிவித்திருந்தார்.
எனினும், விசாரணை நடத்தியதில் சார்ஜன்ட் அவ்வாறான விடுமுறையை கோரவில்லை என தெரியவந்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பணியில் எவ்வளவு அழுத்தங்கள் இருந்தாலும், யாரையும் கொல்லும் உரிமை இல்லை என்றும், இந்த சம்பவத்தில் பொலிசார் விலைமதிப்பற்ற நான்கு உயிர்களை இழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இச்சம்பவத்தில் ஓ.ஐ.சி.யும் காயமடைந்துள்ளதாகவும், அவர் குணமடைந்த பின்னர் மேலதிக விபரங்கள் தெரியவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தால் தாம் மிகுந்த மனவேதனை அடைவதாக அமைச்சர் தெரிவித்தார்.