லேசான அறிகுறியற்ற மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் வைரஸ் தொற்று நீண்ட காலம் உடலில் இருக்கும்.
கொரோனா வைரஸ் சில நாட்கள் சுவாசப் பாதையில் இருந்து அதன் பிறகு இதயம், மூளை மற்றும் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளுக்கும் பரவி பல மாதங்கள் நீடிக்கும் என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சார்ஸ்-கோவ்-2 வைரசின் பரவல் மற்றும் உடல், மூளையின் நிலைத்தன்மை பற்றிய மிக விரிவான பகுப்பாய்வில் அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதை கண்டறிந்தனர். இந்த ஆய்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டன.
இந்த ஆய்வுகளுக்கு தலைமை தாங்கிய செயின்ட் லூயிஸ் ஹெல்த்கேர் சிஸ்டத்தில் உள்ள மருத்துவ தொற்று நோயியல் மையத்தின் இயக்குனர் ஜியாத் அல்-அலி கூறுகையில், கொரோனா வைரஸ் நீண்ட காலம் ஏன் பல உறுப்புகளை பாதிக்கிறது என்று ஆய்வு செய்தோம். லேசான அறிகுறியற்ற மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் வைரஸ் தொற்று நீண்ட காலம் உடலில் இருக்கும்.
அமெரிக்காவில் தொற்று நோய் பரவிய முதல் ஆண்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இறந்த 44 நோயாளிகளின் பிரேத பரிசோதனையின்போது எடுக்கப்பட்ட திசுக்களை பகுப்பாய்வு செய்தோம்.
அப்போது கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி தோன்றிய 230 நாட்கள் வரை மூளை முழுவதும் உள்ள பகுதிகள் உள்பட உடலின் பல பாகங்களில் தொடர்ந்து சார்ஸ்-கோவ்-2 ஆர். என்.ஏ. இருப்பதை ஆய்வுக் குழு கண்டறிந்தது என்றார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு அளவை கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு திசு பாதுகாப்பு நுட்பங்களை பயன் படுத்தினர். மேலும் நோய் தாக்கி முதல் வாரத்தில் இறந்த கொரோனா நோயாளிகளிடம் இருந்து நுரையீரல், இதயம், சிறுகுடல் மற்றும் அட்ரீனல் சுரப்பி உள்ளிட்ட பல திசுக்களில் இருந்து சேகரிக்கப்பட்ட வைரசை வளர்த்தனர்.
அப்போது சார்ஸ்- கோவ்-2 வைரஸ் நோய் தொற்று காற்றுப் பாதைகள் மற்றும் நுரையீரலில் ஆரம்பத்தில் பரவுகிறது. அதன் பிறகு மூளை மற்றும் பரவலாக முழு உடலிலும் உள்ள செல்களை பாதிக்கலாம் என்பதை தங்கள் முடிவுகள் காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
சார்ஸ்-கோவ்-2 இதய தசை செல்களை நேடியாக கொல்லுகிறது. மேலும் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் அறிவாற்றல் குறைபாடுகளால் பாதிககப்படுகின்றனர் என்று நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மெக்லின்டைர் தெரிவித்தார்.
பொதுவாக சார்ஸ்- கோவ்-2 வைரஸ் சிலருக்கு அழிக்கப்படலாம். ஆனால் சிலருக்கு பல வாரங்கள் அல்லது பல மாதங்கள் நீடித்து பல கோளாறுகளை உருவாக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.