தெலுங்கானா மாநிலத்தில் கைத்தறி விற்பனையை ஊக்கப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த கைத்தறி துணிகளை பொதுமக்கள் அதிகளவு பயன்படுத்த வேண்டும் என்று பிரசாரம் செய்து வருகிறது.
இந்த நிலையில் முதல்- மந்திரி சந்திரசேகரராவ் மகனும், மாநில மந்திரியுமான கே.தாரங்க ராமராவை நடிகை சமந்தா ஐதராபாத்தில் சந்தித்து பேசினார். அப்போது கைத்தறி தொழிலாளர்கள் வாழ்க்கை மேம்பாட்டுக்காக தெலுங்கானா மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். இதுபற்றி மந்திரி தாரங்க ராமராவ் கூறுகையில், “நடிகை சமந்தா தானாக முன்வந்து கைத்தறி தொழிலாளர்களுக்கு அரசு செய்து வரும் சேவைகளை பாராட்டியுள்ளார். இது கைத்தறி மீது அவருக்கு உள்ள பற்றை காட்டுகிறது. இதற்காக அவரை பாராட்டுகிறேன். தெலுங்கானாவில் கைத்தறி விற்பனையை ஊக்கப்படுத்த சமந்தாவை தெலுங்கானா அரசு தூதராக நியமித்துள்ளது” என்றார்.
இந்த சந்திப்பின்போது சமந்தாவுக்கு பேச்சம்பள்ளி சேலை, சால்வையை மந்திரி தாரங்க ராமராவ் பரிசாக வழங்கினார். மேலும் சமந்தா நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மந்திரி தாரங்க ராமராவ் உத்தரவிட்டுள்ளார்.