தமிழீழ விடுதலைப் புலிகள் மீள உருவாகின்றார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பதானது வெறும் கட்டுக்கதை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தமது சொந்த நலனுக்காக தமிழ் மக்களை பகடைக்காய்களாக மஹிந்த ராஜபக்ச பயன்படுத்துவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் மீள உருவாவதாக அநுராதபுரத்தில் வைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
இது குறித்து கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள சுரேஷ் பிரேமசந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தரனுக்கு எதிராக தாக்குதல் முன்னாள் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தப் போவதாக தெரிவிக்கப்பட்டமையும் கற்பனையே.
விடுதலைப் புலிகளை அழித்ததாக தெரிவித்து தொடர்ந்தும் சிங்கள மக்கள் மத்தியில் தன்னை ஒரு நாயகனாக காட்டிக்கொள்ளவே விடுதலைப் புலிகள் மீள உருவாகின்றார்கள் என மஹிந்த தெரிவித்துள்ளார்.
இது முற்றிலும் கட்டுக்கதையே. தன்னுடைய அரசியல் பலத்தை அதிகரித்துக்கொள்ளும் நோக்கிலேயே மஹிந்த ராஜபக்ச தமிழ் மக்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக தெரிவித்து கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக கஞ்சா வைத்திருந்ததாகவும், கண்ணிவெடி வைத்திருந்ததாக தெரிவித்தே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு உண்மையாக சுமந்திரனைக் கொல்லச் திட்டம் தீட்டப்பட்டிருந்தால் ஏன் அந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை..? இராணுவத் தளபதியும் அவ்வாறு ஏதும் இடம்பெற்றிருக்கவில்லை என்றே கூறியுள்ளார்.
தமது சொந்த நலனுக்காக தமிழ் மக்களை பகடைக்காய்களாக மஹிந்த ராஜபக்ச பயன்படுத்துகின்றார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.