நாட்டில் தற்பொழுது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமை சமூகப் பிரச்சினையாக மாற்றமடையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பொருளியல் நிபுணருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அண்மையில் தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றில் 10 கிலோ கிராம் பச்சை மிளகாய் மற்றும் 25 கிலோ கிராம் வெங்காயம் என்பன களவாடப்பட்டிருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு முன்னர் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதில்லை என வர்த்தகர்கள் கூறியதாகவும், பொருட்களின் விலையேற்றம் சமூகப் பிரச்சினையாக உருவெடுக்கும் அபாயம் காணப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள விவசாய பிரச்சினை, பெருந்தொற்று நிலைமைகளினால் ஏற்பட்டது கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தினால் அரிசி விலையை கட்டுப்படுத்த முடியாத நிலைமை உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசி, மரக்கறி உள்ளிட்ட விவசாய உற்பத்திகள் அசாதாரணமாக விலை உயர்ந்துள்ளதாகவும் ஏனைய பொருட்களின் மற்றும் சேவைகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவி வரும் உணவுப் பிரச்சினையை இந்த அரசாங்கம் உருவாக்கியது எனவும், தூரநோக்கற்ற தீர்மானங்களினால் இந்த நிலைமை உருவானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.