2016ம் ஆண்டு யாழ். மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) முரளிதரன் தெரிவித்துள்ளார்.
2016ம் ஆண்டு யாழ். மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலகப் பிரிவுகளின் கீழ் செயற்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களின் சராசரிப் பெறுமானம் 99.74 வீதமாக காணப்படுகின்றது. குறித்த அபிவிருத்தித் திட்டங்கள் வீடமைப்பு, வீதி அபிவிருத்தி, நீர் வழங்கல் ஆகிய வகைப்படுத்தலின் கீழ் உள்ளடக்கப்படுகின்றது.
அவற்றில் மீள் குடியேற்ற அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்ட திட்டங்களாக உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்காக 3000 வீட்டுத் திட்டங்களும், இந்தியாவில் இருந்து மீளக் குடியேறியவர்களுக்காக 140 வீட்டுத் திட்டங்களும், பலாலி வடக்கில் 137 வீட்டுத் திட்டங்களும், நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள குடும்பங்களுக்கான 610 வீட்டுத் திட்டங்களும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 745 வீட்டுத் திட்டங்களும், கீரிமலை காங்கேசன்துறை மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு 133 வீட்டுத் திட்டங்களும், மலசல கூடங்கள் இல்லாத குடும்பங்களுக்கு 1200 மலசல கூடங்கள், வாழ்வாதார உதவித் திட்டங்கள் 3000 என்பன வழக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 3887 புதிய வீட்டுத் திட்டங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
குறித்த அபிவிருத்தித் திட்டங்கள் குடும்ப பொருளாதார நிலைமை, விசேட தேவை உடையோர், புனர்வாழ்வு அளிக்கப்பட்டோர், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், யுத்தத்தில் அவயவங்களை இழந்தோர் என கண்டறியப்பட்டு அவர்களுக்கான உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் புதிதாக அமைக்கப்பட்டு வரும் 800 மில்லியன் ரூபாய் செலவில் 3140 வீடுகள் 15பிரதேச செயல கங்களின் கீழ் உள்ள மக்களுக்கு கொடுக்கப்படவுள்ளன.
வீட்டு அபிவிருத்தி திட்டத்துடன் கூடிய வேலைத் திட்டமாக குழாய்கிணறு மற்றும் கிணறு அமைத்து கொடுத்தல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. 15 பிரதேச செயலகங்களின் கீழ் 163 குழாய்கிணறுகள் 47 மில்லியன் ரூபாய் செலவில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. பலாலி வடக்கு, கீரிமலை, மாதகல், வேலணை வடக்கு ஆகிய பிரதேசங்களுக்கான குழாய் மூலமான நீர் வழங்கும் திட்டங்கள் நான்கு 57 மில்லியன் ரூபா செலவில் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
வீதி திருத்த வேலைத்திட்டத்தின் கீழ் 31 வீதிகள் 13 பிரதேச செயலகங்களின் கீழ் 106 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.