இந்தியாவில் ஒமைக்ரான் கொரோனா தொற்று பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்பிற்கான புதிய கட்டுப்பாடுகள் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதனால் புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு நேற்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டபோது , நேற்று எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில், கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக இன்று மீண்டும் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசானை நடத்தினார்.
சென்னை கலைவானர் அரங்கில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை முடிந்த பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவித்த அவர், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமை கொரோன தடுப்பூசி முகாம்கள் செய்ல்படும் என கூறினார்.