கேரள மாநிலம் கோட்டயம் காந்தி நகரில் தனியார் மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கோழிக்கோடு விரிபாடு பகுதியைச் சேர்ந்த லெட்சுமி(வயது21) என்பவர் 3-வது ஆண்டு பிசியோதரபி படித்து வந்தார்.
கொல்லம் அருகே நீண்ட கரையை சேர்ந்தவர் ஆதர்ஷ் (25). இந்த கல்லூரியின் முன்னாள் மாணவரான இவர் அந்த கல்லூரி அருகே பேன்சி கடை நடத்தி வந்தார்.
அவரது கடைக்கு மாணவி லெட்சுமி பொருட்கள் வாங்க வந்த போது அவர்கள் இருவரிடையே பழக்கம் ஏற்பட்டது. இதனால் ஆதர்சுக்கு அந்த மாணவி மீது காதல் ஏற்பட்டது. அவர் தனது காதலை அவரிடம் தெரிவித்த போது அதை ஏற்க லெட்சுமி மறுத்து விட்டார். அவரிடம் நட்பாக தான் பழகியதாக லெட்சுமி கூறினார்.
ஆனாலும் ஆதர்ஷ் தனது காதலை கைவிடவில்லை. லெட்சுமியிடம் தன்னை காதலிக்கும் படி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதனால் அவரது கடைக்கு செல்வதை லெட்சுமி தவிர்த்தார். இது ஆதர்சுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று பகல் கல்லூரி உணவு இடைவேளையின் போது ஆதர்ஷ் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்தார். லெட்சுமி படிக்கும் வகுப்பறைக்குள் சென்ற அவர் தன்னை காதலிக்கும் படி லெட்சுமியிடம் மன்றாடினார்.
ஆனால் அவரை லெட்சுமி கண்டித்து வகுப்பறையை விட்டு வெளியேச் செல்லும்படி கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆதர்ஷ் தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை மாணவி லெட்சுமி மீது ஊற்றி தீ வைத்தார்.
பிறகு அவர் மாணவியை கட்டிப்பிடித்துக் கொண்டார். இதனால் லெட்சுமி, ஆதர்ஷ் இருவரின் உடலிலும் தீ பரவியதால் அவர்கள் அலறினார்கள். கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கொடூர செயலை பார்த்த மாணவ- மாணவிகள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
அவர்களை காப்பாற்ற முயன்ற சில மாணவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. இதற்குள் லெட்சுமியும், ஆதர்சும் உடல் கருகி கீழே பிணமாக சாய்ந்தனர். கல்லூரி வகுப்பறையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்துச் சென்று லெட்சுமி, ஆதர்ஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கல்லூரி வகுப்பறையில் தனது மகள் எரித்துக் கொல்லப்பட்ட தகவல் கிடைத்ததும் லெட்சுமியின் தாய் ஆஷா ராணி அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். அவர் அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் நேற்று விடுமுறை விடப்பட்டது.