யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் திட்டத்திற்காக’ 2010ல் ஆசிய அபிவிருத்தி வங்கியால் 130 மில்லியன் டொலர் பெறுமதியான கடன் வசதி மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்திற்கான உள்ளுர்ச் செலவுகளுக்கான 26 மில்லியன் டொலர் நிதியானது சிறிலங்கா அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியிருந்தது.
யாழ்ப்பாண நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில் வாழும் 300,000 மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வசதியை வழங்குதலும் யாழ்ப்பாண நகரைச் சேர்ந்த 80,000 மக்களுக்கு சுகாதார வசதியை வழங்குவதையும் நோக்காகக் கொண்டே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கான மூல நீரானது கிளிநொச்சி இரணைமடுக் குளத்திலிருந்து பெற்றுக்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது. இரணைமடுக் குளத்தின் நீரானது பளைக்கு அருகிலுள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு பாய்ச்சப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு வழங்கப்படுவதே இத்திட்டத்தின் நோக்காகக் காணப்பட்டது.
ஆனால் இத்திட்டத்தை கிளிநொச்சியைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்த்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இரணைமடுக் குளத்திலிருந்து பெறப்படும் நீரானது தமது சிறுபோக நெற்பயிர்ச் செய்கையின் 30 சதவீதத்தை மேற்கொள்வதற்கு மட்டுமே போதுமானதாக உள்ளதாகவும் இந்த நீரை யாழ்ப்பாணத்திற்கும் வழங்கினால் இதனால் தாம் பாதிக்கப்படுவோம் எனவும் கிளிநொச்சி வாழ் விவசாயிகள் தெரிவித்தனர்.
இவ்வாறான ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில், இத்திட்டத்திற்கான மூல நீரை இரணைமடுக்குளத்திலிருந்து பெறுவது என்பது கைவிடப்பட்டு இதற்குப் பதிலாக மருதங்கேணிக்கு அருகிலுள்ள தாளையடி கடற்கரையில் அமைக்கப்படும் ‘ஊடுகசிவு உவர் நீர்ச் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து’ நீரைப் பெற்றுக் கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
உவர்நீரைக் குடிநீர்த் தேவைக்காக மாற்றும் சுத்திகரிப்பு நிலையமானது நாளொன்றுக்கு 24 மில்லியன் லீற்றர் நீரைக் கொள்திறனாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்திற்காக ஒப்புதல் அளிக்கப்பட்ட கடனானது 94 மில்லியன் டொலராகக் குறைக்கப்பட்டுள்ளது.
எனினும், உவர்நீர்ச் சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவுவதற்கும் அவற்றைப் பராமரிப்பதற்கும் அதிக செலவீனம் ஏற்படுகிறது. ஆகவே இத்திட்டத்திற்கான மேலதிக கடனாக 120 மில்லியன் டொலர் நிதியானது ஆசிய அபிவிருத்தி வங்கியால் வழங்கப்படுவதாக உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள தாளையடியில் நாளொன்றுக்கு 24 மில்லியன் லீற்றரைக் கொள்திறனாகக் கொண்ட உவர் நீர்ச் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றைக் கட்டுவதற்கும் அதனை இயக்குவதற்குமான இத்திட்டத்தை மேற்கொள்வதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான முடிவுத்திகதி மே 02, 2017 ஆகும்.
தொண்டைமானாறு தடுப்பணை
இவ்வகையான சுத்திகரிப்பு ஆலைகளை அமைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் வெளிப்புற வளைந்து கொடுக்கும் விளிம்புகளைக் கட்டுவதற்கான செலவு அதிகம் என்பதாலேயே இந்த ஆலைகளுக்கான செலவும் அதிகமாகக் காணப்படுகின்றது. அதாவது கடலிலிருந்து இந்த ஆலைக்கு நீரைப் பாய்ச்சுவதற்கு உயர் அழுத்தம் கொண்ட நீர்ப்பம்பிகள் தேவையாக உள்ளன.
இந்தப் பம்பிகள் இவ்வாறான மெல்லிய வளைந்து கொடுக்கும் விளிம்புகளின் ஊடாகவே நீரைப் பாய்ச்சுகின்றன. இதற்கு அதிக மின்சாரம் தேவைப்படுகிறது. நாளொன்றுக்கு 24 மில்லியன் லீற்றர் நீரைப் பாய்ச்சும் இவ்வாறான சுத்திகரிப்பு ஆலையானது கிட்டத்தட்ட ஐந்து தொடக்கம் ஆறு மெகாவற் மின்சாரத்தை நுகரும்.
சிறிலங்காவில் அமைக்கத் தகுந்த விதத்தில், இந்தியாவின் சென்னையில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லீற்றர் உவர் நீர்ச் சுத்திகரிப்பு ஆலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் சிறிலங்காவைப் போன்றே மின்சாரச் செலவீனத்திற்கான கொடுப்பனவு பெறப்படுகிறது. இந்த ஆலையானது 2010ல் உருவாக்கப்பட்டு சென்னை நீர் சுத்திகரிப்பு நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.
இந்த நிறுவனமானது இங்கு சுத்திகரிக்கப்படும் நீரை சென்னை நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் சபைக்கு விற்பனை செய்கிறது. இவ்வாறு விற்கப்படும் நீரின் விலையானது 2005ல் லீற்றர் ஒன்று 1.03 டொலர் என சமரசம் செய்யப்பட்டது.
இதேபோன்றே தாளையடியில் ஆலை ஒன்று நிறுவப்பட்டால் அதற்கான செலவீனமும் இதைவிட அதிகமாகக் காணப்படும். சென்னை மீஞ்சூர் நீர்ச் சுத்திகரிப்பு ஆலையில் 100 மில்லியன் லீற்றர் நீர் சுத்திகரிக்கப்படும் அதேவேளையில் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள தாளையடி நீர்ச் சுத்திகரிப்பு ஆலையில் நாளொன்றுக்கு 24 மில்லியன் டொலர் நீர் மட்டுமே சுத்திகரிக்கப்படும் என்பதால் சென்னையை விட இதற்கான செலவு அதிகமாகவே காணப்படும். அண்ணளவாக தாளையடியில் உவர்நீர் சுத்திகரிக்கப்பட்டால் ஒரு லீற்றருக்கு 1.20 டொலர் செலவீனம் ஏற்படும்.
இந்நிலையில் ‘யாழ்ப்பாணத்திற்கான ஆறு ஒன்றை உருவாக்கும் திட்டம்’ (A River for Jaffna) ஒன்று இதற்கான மாற்றுத் திட்டமாக முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவீனமும் குறைவாகவே காணப்படுகிறது. இதற்கான திட்டமானது உள்ளுர் பொறியியலாளர்களால் வரையப்பட்டுள்ளது. இதற்கான மூலதனச் செலவானது உவர்நீர்ச் சுத்திகரிப்பு ஆலைக்கான செலவிலிருந்து பத்தில் ஒரு பங்கு குறைவானதாகும். இத்திட்டத்திற்கு நீர் பாய்ச்சல் தேவையில்லை என்பதால் இதற்கான பராமரிப்புச் செலவானது குறைவாகக் காணப்படும்.
யாழ்ப்பாணத்திற்கான ஆறு:
இத்திட்டமானது 50 ஆண்டுகளுக்கு முன்னர் பரிந்துரைக்கப்பட்டது. இதற்கான பணிகள் 50 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு இது பகுதியளவில் நிறைவுசெய்யப்பட்டது. யாழ் குடாநாட்டின் நீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக நிலத்தடி நீர்த் தேக்கத்தைப் பயன்படுத்தி சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்வதே இத்திட்டத்தின் நோக்காகும்.
யாழ்ப்பாண ஆறு திட்டம்
இதன் மூலம் யாழ்ப்பாணக் கிணறுகளிலுள்ள உவர்த் தன்மையைக் குறைப்பதுடன் உவர்த்தன்மையால் விவசாயச் செய்கை பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் மீண்டும் விவசாயப் பயிர்ச்செய்கையை ஆரம்பித்தலாகும். இத்திட்டத்தின் மூலம் தற்போது உவர்த்தன்மையைக் கொண்டுள்ள யாழ்ப்பாணத்தின் 30 சதவீதமான கிணறுகளை குடிப்பதற்குகந்த நீரைப் பெற்றுக் கொள்வதற்கேற்ப மாற்ற முடியும். இத்திட்டமானது பின்வரும் பகுதிகளைக் கொண்டுள்ளது. அவையாவன:
மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் உவர்நீர் கலப்பதைத் தடுப்பதற்காக தொண்டைமானாறு அணையை மீளவும் நிர்மாணித்தல். இதன்மூலம் வடமராட்சி கடல்நீரேரியை நன்னீர் நீரேரியாக மாற்றமுடியும்.
மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் உவர்நீர் கலப்பதைத் தடுப்பதற்காக அரியாலையில் புதிய அணை ஒன்றை நிர்மாணித்தல். இதன்மூலம் உப்பாறு கடல்நீரேரியை சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்ளக்கூடிய நீரேரியாக மாற்றமுடியும்.
ஆனையிறவு வீதி மற்றும் தொடருந்து தண்டவாளப் பாலங்களின் கீழாக உள்ள துளைகளைத் தடைசெய்து ஆனையிறவு கடல்நீரேரியின் கிழக்குப் புறமுனையிலுள்ள சுண்டிக்குளத்தில் புதிய ஆணை மற்றும் வடிகாலைக் கட்டுதல். இதன்மூலம் ஆணையிறவு கடல்நீரேரியை குடிநீரைப் பெறக்கூடிய நீரேரியாக மாற்றமுடியும்.
ஆனையிறவுக் கடல்நீரேரி, வடமராட்சி கடல்நீரேரி மற்றும் உப்பாறுக் கடல்நீரேரி ஆகிய மூன்று கடல்நீரேரிகளின் நீரையும் கொண்டு செல்வதற்காக நான்கு கிலோமீற்றர் நீளமான புதியதொரு முள்ளியான் இணைப்புக் கால்வாய் ஒன்றை உருவாக்குதல்.
யாழ்ப்பாணத்திற்கான ஆறு என்கின்ற இத்திட்டத்தை முற்றுமுழுதாக நிறைவுசெய்வதற்கான நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு நீர்ப்பாசனத் திணைக்களம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் இதனை அடைந்து கொள்ள முடியவில்லை.
எனினும், ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தொண்டைமானாறு அணைக்கட்டைப் புனரமைப்பதற்காவும் அரியாலை அணைக்கட்டை நிர்மாணிப்பதற்காகவும் நிதி வழங்கப்பட்டது. இவ்விரு அணைக்கட்டுக்களுக்குமான பணிகள் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. வடமராட்சி மற்றும் உப்பாறு நீரேரிகள் நன்னீரைக் கொண்டுள்ளன. ஆனாலும் ஆனையிறவுக் கடல்நீரேரியானது தற்போதும் உவர்நீர்க் கடல்நீரேரியாகவே காணப்படுகிறது.
நாடு முழுவதிலும் தேசிய நீர்ப் பயன்பாட்டு பாரிய திட்டம் ஒன்றின் கீழ் 30 நீர்த் திட்டங்களை மேற்கொள்ளுமாறு அவுஸ்திரேலிய பொறியியலாளர்களிடம் கோரப்பட்டுள்ளது. அடுத்த இருபது ஆண்டுகளில் இத்திட்டங்கள் நிறைவுசெய்யப்பட வேண்டும். இத்திட்டத்தில் ‘யாழ்ப்பாணத்திற்கான ஆற்றுத்’ திட்டமானது முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூற்று ஆய்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மேற்கொள்வதற்கு 1142 மில்லியன் ரூபாக்கள் அல்லது 9.4 மில்லியன் அமெரிக்க டொலர் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது.
அரியாலை தடுப்பணை
யாழ்ப்பாணத்திற்கு நாளொன்று 25 மில்லியன் லீற்றர் நீர் தேவை எனவும் இது பரிந்துரைக்கப்பட்ட தாளையடி சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படும் என வரையறுக்கப்பட்ட 24 மில்லியன் லீற்றர் நீரை விட அதிகமாகக் காணப்படுவதாகவும் 2006 மார்ச் மாதம் வெளியிடப்பட்ட யாழ்ப்பாணம்- கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தின் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இறுதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு மில்லியன் லீற்றரைக் கொள்திறனாகக் கொண்ட நீர்ச் சேகரிப்புக் கிணறுகள் பியகம, கொறன, கொஸ்கம போன்ற பல இடங்களில் காணப்படுகின்றன. நாளொன்றுக்கு 10 மில்லியன் லீற்றர் நீரைச் சேகரித்து வைக்கக்கூடிய கிணறு ஒன்றை காத்தான்குடியில் அமைப்பதற்கான திட்டம் ஒன்றும் வரையப்பட்டுள்ளது.
இவ்வாறான நீர்ச்சேகரிப்புக் கிணறுகள் தொடர்பான மேலதிக தகவல்களை ‘வி.தர்மரத்தினம் மற்றும் டி.வி.கன்யோன்’ ஆகியோரால் எழுதப்பட்ட நூலில் காணமுடியும். இந்த நூலில் சிறிலங்கா மற்றும் மேற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள பின்ஜெலியில் காணப்படும் நீர்ச்சேகரிப்புக் கிணறுகள் தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆகவே இவ்வாறான நீர்ச் சேகரிப்புக் கிணறுகளை யாழ்ப்பாணக் குடாநாட்டில் அமைக்கும் போது உவர்நீர்ச் சுத்திகரிப்பு ஆலைகளை விட இவற்றுக்கான செலவு குறைவாகவே காணப்படும் என்பதுடன் மக்களின் தேவைக்கேற்ப நீர் வழங்கப்படும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கான ஆற்றுத் திட்டத்தை நிறைவு செய்வதற்கான மூல நீரைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக இந்த நூலை எழுதிய ஆசிரியர் 2009ல் ஆசிய அபிவிருத்தி வங்கியைச் சேர்ந்த மணிலாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார். இதில் ஆனையிறவுக் கடல்நீரேரியிலிருந்து நீரைப் பெற்று இத்திட்டத்தை மேற்கொள்ள முடியும் என யோசனை முன்வைக்கப்பட்டது. இக்கடிதத்திற்குஜலை மாதம் 2009ல் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தென்னாசியத் திணைக்களத்தின் நகர அபிவிருத்திப் பிரிவின் இயக்குனரால் எழுதப்பட்ட பதில் கடிதத்தில் ‘நாங்கள் தங்களின் திட்டத்தை ஏற்றுக்கொள்கிறோம். அதாவது யாழ்ப்பாணத்திற்கான ஆற்றுத் திட்டமானது அடிப்படையில் அங்கு வாழும் மக்களின் விவசாய மற்றும் நிலத்தடி நீர்த் தேவைக்காகப் பயன்படுத்தப்படும் என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் இத்திட்டம் மேலும் ஆராயப்பட வேண்டும்.’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தாளையடி உவர் நீர்ச் சுத்திகரிப்பு நிலையத் திட்டம் அமுல்படுத்தப்பட்டால் ‘யாழ்ப்பாணத்திற்கான ஆறு’ என்கின்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்பதே உண்மையாகும். ஆண்டின் சில மாதங்களில் ஆனையிறவுக் கடல்நீரேரிக்குள் கனகராயன் ஆற்றிலிருந்து சுத்தமான நீர் பெறப்பட்டு அங்கிருந்து சுண்டிக்குளம் கடலிற்குள் இந்த நீர் பாயும்.
அதேவேளையில் இதற்கு ஒரு சில கிலோமீற்றர் இடைவெளியிலுள்ள தாளையடியில் அதிக செலவில் உவர்நீர்ச் சுத்திகரிப்பு ஆலை ஒன்று அமைக்கப்பட்டு அதற்கான பராமரிப்புச் செலவும் அதிகமாக உள்ள இத்திட்டம் அமுல்படுத்தப்படும்.
வடக்கு மாகாண சபையின் வடக்கு மாகாண நீர் வழங்கல் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஒன்றுகூடலானது ஜனவரி 28-30, 2017 வரை இடம்பெற்ற நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இதில் பேசப்பட்டிருக்கும் என நம்பப்படுகிறது.