அமெரிக்காவில் செல்ல 7 நாட்டு இஸ்லாமியர்களுக்கு தடைவிதித்துள்ள நிலையில், அங்குள்ள விமான நிலையங்களில் நூற்றுக்கணக்கானோரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் டல்லஸ் விமான நிலையத்தில் குறிப்பிட்ட கூட்டத்தில் சிறுவன் ஒருவனையும் அமெரிக்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் சிறுவனின் நடவடிக்கை இருப்பதாக கூறி விலங்கு வைத்த அதிகாரிகள், 5 மணி நேரத்திற்கு பின்னர் குறித்த சிறுவன் அமெரிக்க குடிமகன் எனவும் Maryland பகுதியில் தாயாருடன் வசித்து வருவதும் தெரிய வந்துள்ளதையடுத்து விடுவித்துள்ளனர்.
இதனையடுத்து சிறுவனின் தாயாரை குறித்த விமான நிலையத்தில் இருந்து தேடி கண்டுபிடித்த அதிகாரிகள் சிறுவனை ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று சிறுவன் விமான நிலையத்தில் வந்திறங்குவது குறித்து உரிய தகவல்கள் அதிகாரிகளிடம் இருந்தும் சிறுவனை தடை செய்து விலங்கு வைத்துள்ளது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர் ஆர்வலர்கள்.
கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்ட நிர்வாக ஆணையால் அடுத்த 30 நாட்களுக்கு ஈரான், இராக், லிபியா, ஏமன் உள்ளிட்ட 7 நாடுகளின் குடிமக்களுக்கு விசா வழங்கப்பட மாட்டாது.
மட்டுமின்றி சிரியா அகதிகளுக்கு காலவரையற்ற தடையும் விதித்துள்ளது டிரம்ப் அரசு. எஞ்சிய 6 நாடுகளில் இருந்து அகதிகளாக அமெரிக்க செல்லவிருக்கும் நபர்களுக்கு 120 நாட்கள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் ஜனாதிபதி டிரம்ப்.