ஆப்கானிஸ்தான் நாட்டில் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு பெண்களை கொல்வது, மூக்கு, காதுகளை அறுப்பது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.
இந்த நிலையில் ஒரு பெண்ணின் நடத்தையில் சந்தேகப்பட்ட அவரது கணவர் அந்த பெண்ணின் 2 காதுகளையும் துண்டித்த சம்பவம் நடந்துள்ளது. ஜெரினா என்ற அந்த பெண்ணுக்கு 23 வயது ஆகிறது. கஜிண்டா என்ற பகுதியில் அவர் வசித்து வந்தார். 13 வயதில் இவருக்கு திருமணம் ஆனது. குழந்தைகள் உள்ளனர்.
ஜெரினா மீது கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே, ஜெரினாவை அவரது தாய் வீட்டுக்கு கூட செல்ல அனுமதித்தது இல்லை. இது சம்பந்தமாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறும் ஏற்படும்.
இந்த நிலையில் ஜெரினாவின் இரு காதுகளையும் அவரது கணவர் துண்டித்து விட்டார். இதில், படுகாயம் அடைந்த ஜெரினா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றி ஜெரினா கூறும் போது, நான் எந்த தவறும் செய்யாத நிலையில் என் மீது தொடர்ந்து என் கணவர் சந்தேகப்பட்டு துன்புறுத்தி வந்தார். இப்போது என் காதுகளை துண்டித்து விட்டார். இனி அவருடன் ஒருபோதும் வாழ மாட்டேன் என்று கூறினார்.