இந்தியாவிற்கு வழங்கப்பட்ட எண்ணெய் குதங்களை இலங்கையினால் மீண்டும் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் இந்த எச்சரிக்கையினை பதிவு செய்துள்ளார். இதன்போதே மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“எனக்கு தெரிவிந்த வகையில், வெளிநாடுகளுக்கு உடன்படிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்ட எந்தவொரு சொத்தினையும் மீளப்பெற்றுக்கொள்ள முடியாது போனது. சிறந்த உதாரணமாக பிரீமா கோதுமை மா உற்பத்தி நிறுவனத்தைத் தெரிவிக்க முடியும்.
ராஜபக்ஷ அரசாங்கம் எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு தாரைவார்த்துவிட்டு மக்களை ஏமாற்றும் வேலையினைச் செய்து வருகின்றனர். அபிவிருத்தி செய்வதற்கான கூட்டிணைவு எனத் தெரிவிப்பது முற்றிலும் பொய்யான விடயம்.
உண்மையினை மூடி மறைக்கும் வேலையினை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில செய்துவருகின்றார். பொய்யான தேச அபிமானம் குறித்து அவர்கள் பேசுகின்றார்கள். நாட்டிற்கு கேடுவிளைவிக்கும் காரியங்களைச் செய்துவிட்டு, வெட்கமில்லாமல் தேச பக்தியுடன் பேசுகின்றார்கள்.
மறுபுறத்தில் சீனா இலங்கைக்கு அடிக்கடி வந்து செல்கின்றமையினைப் பார்த்தால், ஏதோ தமது நிலத்திற்கு சென்று வருவது போல் உள்ளது.
சீனா இலங்கையின் பொருளாதார பிரச்சினைக்கு உதவி செய்தாலும், தேசிய சொத்துக்களை பறிக்கும் நிலை தான் காணப்படுகின்றது. இது நாட்டிற்கும் மக்களுக்கும் அபாயமான நிலையாகும்” என்றார்.