நொறுக்குத்தீனிகளுக்குப் பதிலாக நட்ஸ் வகைகளைச் சாப்பிடுங்கள் என்கிறார்கள் மருத்துவர்கள். பாதாம், பிஸ்தா, வால்நட் என நட்ஸ் வகைகளில் புரதச்சத்தும், நல்ல கொழுப்பும் நிறைந்திருக்கின்றன. இதய நோயைத் தடுக்க, கொலஸ்ட்ராலைக் குறைக்க, ஆற்றல் கிடைக்க நாம் நட்ஸ் வகைகளைச் சாப்பிடலாம்.
இவையெல்லாம் தெரிந்திருக்கும் உங்களுக்கு எவ்வளவு நட்ஸ் சாப்பிட வேண்டும் என்று தெரியுமா?… தினமும், 100 கிராம் முதல் கால் கிலோ வரைகூட சிலர் நட்ஸ் கொறிக்கின்றனர். இது தவறு. நட்ஸ் வகைகள் கலோரி நிறைந்தவை.
மிக அதிகமாக சாப்பிடுவதை நிறுத்திவிட்டு தினமும் 20 கிராம் அளவுக்குச் சீராக நட்ஸ் சாப்பிடுவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். ஒரே நட்ஸ் வகையை மட்டும் 20 கிராம் சாப்பிடாமல், நட்ஸ் கலவையாகச் சேர்த்து, 20 கிராம் தினமும் சாப்பிட்டுவந்தால், ஊட்டச்சத்துக்கள் சரிவிகிதமாகக் கிடைக்கும்.
சாப்பிடும்போது, சாப்பிட்டு முடித்தவுடனும், சாப்பாட்டுக்கு முன்னரும் நட்ஸ் சாப்பிட வேண்டாம். ஒரு உணவு வேளைக்கும் அடுத்த உணவு வேளைக்கும் இடையில், உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரத்துக்குப் பின்பும், அடுத்த உணவு வேளைக்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பும் நட்ஸ் சாப்பிடலாம்.
உதாரணமாக, ஒருவர் காலை 8 மணிக்கு காலை உணவையும், மதியம் ஒரு மணிக்கு மதிய உணவையும் சாப்பிடுபவராக இருந்தால் காலை 10 -11 மணி அளவில் நட்ஸ் சாப்பிடுவது நல்லது.
எதை எவ்வளவு சாப்பிட வேண்டும்?
இதில் ஒரு நாளைக்கு ஏதாவது ஒன்றிரண்டு அல்லது எல்லாவற்றையும் கலந்து 20 கிராம் என்ற அளவில் சாப்பிடலாம்.
பாதாம் – 4 முதல் 7 (எண்ணிக்கையில்)
வால்நட் – 3 முதல் 5 (எண்ணிக்கையில்)
பேரீச்சை – 1 -2 (நடுத்தர சைஸ்)
பிஸ்தா – அதிகபட்சம் 10 கிராம்.
உலர் திராட்சை – 10 (எண்ணிக்கையில்)
முந்திரி – 5 முதல் 7 (எண்ணிக்கையில்)
அப்ரிகாட் – 3 முதல் 5 (எண்ணிக்கையில்)
உலர் அத்தி – இரண்டு