19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை போட்டி இதுவரை 13 முறை நடந்துள்ளது. இதில் இந்தியா அதிகபட்சமாக 4 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.
19 வயதுக்குட்பட்டவருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) 1988-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
ஆஸ்திரேலியாவில் நடந்த முதல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.
கடைசியாக 2020-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த போட்டியில் வங்காளதேசம் சாம்பியன் பட்டம் பெற்றது.
இதுவரை 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை போட்டி 13 முறை நடந்துள்ளது. இதில் இந்தியா அதிகபட்சமாக 4 முறை கோப்பையை வென்றது. ஆஸ்திரேலியா 3 தடவையும், பாகிஸ்தான் 2 தடவையும், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காள தேசம் ஆகிய அணிகள் தலா ஒரு முறையும் கோப்பையை கைப்பற்றின.
14-வது 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நாளை தொடங்குகிறது. பிப்ரவரி 5-ந் தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.
இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் வங்காள தேசம் உள்பட 16 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்று உள்ளன.
இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்று உள்ளது. தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, உகாண்டா ஆகிய நாடுகள் அந்த பிரிவில் இடம் பெற்று உள்ளன.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 15-ந் தேதி எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி நடக்கிறது. அயர்லாந்துடன் 19-ந் தேதியும், உகாண்டாவுடன் 22-ந் தேதியும் மோதுகிறது.
நாளை நடைபெறும் தொடக்க ஆட்டங்களில் இந்த போட்டியை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து-இலங்கை (குரூப் ‘டி’) அணிகள் மோதுகின்றன.
ஆண்டிகுவா, கயானா, செயின்கிட்ஸ், டிரினிடாட் ஆகிய 4 இடங்களில் போட்டி நடக்கிறது. பிப்ரவரி 5-ந் தேதி இறுதிப்போட்டி ஆண்டிகுவாவில் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. மொத்தம் 48 ஆட்டங்கள் நடக்கிறது.