வங்காள தேச கிரிக்கெட் அணி கடந்த 2000-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடும் அந்தஸ்தை பெற்றது. இந்தியா அதே ஆண்டு நவம்பர் 10-ந்தேதி அங்கு சென்று முதன் முறையாக வங்காள தேசத்திற்கு எதிரான டெஸ்டில் விளையாடியது.
சுமார் 16 வருடங்களாக வங்காள தேச அணி இந்தியா வந்து விளையாடியது கிடையாது. தற்போது முதன்முறையாக வங்காள தேசம் இந்தியா வந்து ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.
இந்த டெஸ்ட் ஐதராபாத்தில் வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான வங்காள தேச அணி நேற்று அறிவிக்கப்பட்டது, முஷ்பிகுர் ரஹிம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்தியாவில் முதன்முறையாக சென்று விளையாடும் எங்களுக்கு இதுஒரு வரலாற்று சிறப்புமிக்க போட்டி என்று நான் நம்பவில்லை. எங்களுடைய ஆட்டத்தை பார்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் மீண்டும் மீண்டும் இந்தியாவில் வந்து விளையாட அழைக்க வேண்டும் என்று வங்காள தேச அணியின் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் கூறியுள்ளார்.
மேலும், இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டி குறித்து முஷ்பிகுர் ரஹிம் கூறுகையில் ‘‘இந்தியாவில் விளையாடுவது குறித்து சற்று ஆச்சரியம் அடைந்தேன். ஆனால் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க போட்டி என்று நான் நம்பவில்லை.
ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்டில் விளையாடுவதை உதாரணமாக எடுத்துக் கொண்டால், எங்களுக்கு நெருக்கடி அதிகமாக இருக்கும். ஏனென்றால் அந்த டெஸ்டில் நாங்கள் தோற்று விட்டால் அதைவிட மோசமானது எதுவும் இல்லை. தற்போது நாங்கள் சிறந்த அணியாக உள்ளோம். ஐந்து வருடத்திற்கு முன்பு இருந்த அணி இல்லை.
இந்திய ஆடுகளத்தில் எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை உலக கிரிக்கெட்டிற்கு சொல்ல விரும்புகிறோம். எத்தனை வருடத்திற்குப் பிறகு இந்தியா வந்து விளையாடுகிறோம் என்பது பற்றி நான் நினைக்கவில்லை. இந்தியா எங்களை மீண்டும் மீண்டும் அழைக்கும் வகையில் நாங்கள் விளையாட விரும்புகிறோம்” என்றார்.