சீரடி சாய்பாபா, கண்கண்ட தெய்வமாக, மிகப்பெரிய மகானாக வாழ்ந்த போதும், மக்களுடன் மக்களாகவே வாழ்ந்தார். அவர் தன்னைச் சுற்றி எந்த கட்டுப்பாட்டையோ, நெருங்க முடியாத வளையத்தையோ ஏற்படுத்தி கொள்ளவில்லை. அவர் வாழ்க்கை முறை மிக எளிமையாக இருந்தது. எல்லோரிடமும் அவர் அன்புடன் பழகினார். அவர் தனக் கென்று ஒரு பைசாக் கூட வைத்துக் கொண்டதில்லை.
எந்த ஒரு பக்தனிடமும் அவர் வித்தியாசத்தை கண்டதில்லை. எல்லோரையும் ஒரே மாதிரியாக நடத்தினார். தனது அவதாரத்தின் நோக்கமே, எந்தவித பாகுபாடும் பார்க்காமல், எல்லோருக்கும் ஆசி வழங்குவதே என்று பாபா பல தடவை கூறியுள்ளார். அதன்படி தன்னை நாடி வந்தவர்களின் குறைகளைத் தீர்த்தார்.
சில பக்தர்களிடம் அவர், “எங்கும் சிதறாத கவனத்துடன் நீ என்னையே நோக்கு. என்னையே நினைத்துக் கொண்டிரு. அப்படி நீ நினைத்தால் நானும் உன்னை நோக்குவேன். என்னை நீ நினைக்க நான்கு வித சாதனை முறைகளும், ஆறு விதமான சாஸ்திரங்களும் தேவை இல்லை” என்பார்.
அதை ஏற்று பாபாவே கதி என்று கிடந்தவர்கள் ஆத்ம ஞானம் பெற்றனர். தன்னை சந்தித்த ஒவ்வொரு பக்தனின் மனதையும் பாபா முழுமையாக அறிந்திருந்தார். பக்தர்கள் மனதில் பாபா அன்பை மட்டும் விதைக்கவில்லை. நல்ல அறிவுரைகள் கூறி அமைதியையும் விதைத்தார்.
சில பக்தர்கள் சீரடியில் தேவை இல்லாத மன சஞ்சலத்துடன் அலைந்தனர். அந்த மன சஞ்சலங்களை அறிந்து தக்க சமயத்தில் அந்த பக்தர்களை பாபா திருத்தினார்.
இதற்கு இரண்டு பக்தர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் உதாரணங்களாக உள்ளன. சாய்பாபா தொடர்புடைய பழமையான நூல்களில் அது பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுபற்றி காணலாம்….
சீரடியில் ஸாடே என்று ஒரு அரசாங்க அதிகாரி வசித்து வந்தார். இவர் சாய்பாபாவின் அதி தீவிர பக்தர்களில் ஒருவராவார். தினமும் அவர் துவாரகமாயி மசூதிக்கு சென்று பாபாவிடம் ஆசிப் பெற்றுச் செல்வார். பாபாவிடம் பக்திக் கொண்டிருந்தாலும் அவர் பெண்கள் விஷயத்தில் சற்று பலவீனமாக இருந்தார். ஒரு தடவை சீரடி புறநகர் பகுதியில் உள்ள ஒரு பெண்ணைப் பற்றி ஸாடே கேள்விப்பட்டார்.
அந்த பெண் ஒரு விலைமாது ஆவார். அவள் மிக, மிக அழகாக இருப்பாள் என்று நண்பர்கள் அடிக்கடி சொல்லவே, அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை ஸாடேக்கு எழுந்தது. அன்றிரவு அவர் அந்த பெண்ணின் வீட்டுக்குச் சென்றார். மறுநாள் காலை அவர் வழக்கம் போல சாய்பாபாவை வழிபட மசூதிக்கு வந்தார்.
பொதுவாக ஸாடேயைப் பார்த்ததுமே பாபா முகம் மலர புன்னகைப்பார். அந்த புன்னகையே பாபா ஆயிரம் சூரியனாக ஒளி வீசி ஆசீர்வதிப்பது போல ஸாடே உணர்வார்.
ஆனால் அன்று பாபா, ஸாடேயைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை. கண்டும் காணாதது போல இருந்தார். உடனே ஸாடே, பாபாவின் பார்வைபடும் விதமாக போய் நின்றார். பாபா அவரைப் பார்த்தார். ஆனால் புன்னகை செய்யவில்லை. அவர் முகத்தில் இருந்து புயல் வீசியது போல இருந்தது.
ஸாடே ஒன்றும் புரியாமல் பாபா அருகில் நின்று கொண்டே இருந்தார். சிறிது நேரத்துக்குப் பிறகு பாபா மெல்லத் திரும்பினார். ஸாடேயைப் பார்த்து “ஸ்கூலுக்குப் போனாயா?” என்றார். ஸாடேக்கு எதுவும் புரியவில்லை. திருதிருவென விழித்தார்.
சீரடி பகுதி மக்கள் அந்த விலை மாதுவின் இருப்பிடத்தை “ஸ்கூல்” என்ற சங்கேத வார்த்தை மூலம் அழைத்து வந்தனர். இது ஸாடேக்கு தெரிந்திருக்கவில்லை.
இருந்த இடத்தில் இருந்தபடியே இந்த உலகில் என்ன நடக்கிறது என்பதை அறிந்திருந்த பாபாவுக்கு இது தெரியாமல் இருக்குமா? எனவே அவர் அந்த சங்கேத வார்த்தையைப் பயன்படுத்தி கேள்வி கேட்டார்.
இதை உணராத ஸாடே மிகவும் வெகுளித்தனமாக, “என்ன பாபா, இப்படி கேட்கிறீர்கள்? நான் ஸ்கூலுக்கு போகாமல் எப்படி பட்டம் பெற்றிருக்க முடியும்? ஸ்கூலுக்கு போய் படித்ததால் தானே இன்று நான் அரசு உயர் அதிகாரியாக பதவியில் இருக்க முடிகிறது” என்றார். ஸாடே இப்படி சொன்னதும் பாபா கலகலவென சிரித்தார். பிறகு அவர் எதுவும் பேசவில்லை. இதனால் ஸாடேவும் சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டார்.
அன்றிரவு ஸாடே மீண்டும் அந்த விலை மாது வீட்டுக்குச் சென்றார். சிறிது நேரம் அந்த பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தார். பிறகு அவர் அந்த பெண்ணுடன் படுக்கை அறைக்குள் செல்ல முயன்றார். அடுத்த வினாடி அந்த அறைக் கதவு தானாகத் திறந்து கொண்டது.
அங்கு பாபா நின்று கொண்டிருந்தார். “என்ன… ஸாடே நேற்றே நான் உன்னை எச்சரித்தேன். நீ அதை கவனத்தில் கொள்ளவில்லை. நீ நரகத்தை நோக்கி செல்லும் செயல்களில் ஈடுபடுகிறாய்” என்று சொன்னார்.
அடுத்த வினாடி பாபா அந்த இடத்தில் இருந்து மாயமாய் மறைந்து விட்டார்.
ஸாடே வெலவெலத்துப் போனார். அவர் உடம்பில் இருந்து வியர்வை ஆறாய் வழிந்து ஓடியது. அந்த விலை மாது வீட்டில் இருந்து வெளியேறினார். அவர் கால்கள் தாமாக துவாரகமாயி மசூதியை நோக்கி நடந்தன. வழி நெடுக அவர் முந்தைய தினம் நடந்ததை நினைத்துப் பார்த்தார்.
அப்போது அவருக்கு பாபா, ஸ்கூலுக்குப் போனாயா என்று கேட்டது நினைவுக்கு வந்தது. அதன் பிறகே ஸ்கூல் என்பது அந்த விலைமாதுவின் வீட்டை குறிக்கும் என்பது அவருக்கு தெரிய வந்தது. மசூதிக்குள் சென்று பாபா காலடியில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். தன்னை மிகப்பெரும் நரகத்தில் இருந்து காப்பாற்றியதற்காக பாபாவுக்கு நன்றி தெரிவித்தார்.
பாபாவால் மனசஞ்சலம் தீர்க்கப்பட்ட பிறகு அவர் ஸ்கூல் பக்கமே எட்டிப்பார்க்க வில்லை. ஸாடேயைப் போல் நானா சாகேப் சந்தோர்கர் என்ற பக்தரும் பாபா ஆசியால் மன சஞ்சலத்தில் இருந்து மீண்டார். இவர் எப்போதும் பாபா அருகில் அமர்ந்து இருக்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தார்.
ஒருநாள் மசூதியில் பாபா அருகில் அமர்ந்து மகல் சாபதி, சாமா, நானா சாகேப் சந்தோர்கர் மற்றும் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு பாபா ஆன்மிக விளக்கங்களை அளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு குடும்பத்தினர் பாபாவிடம் ஆசி பெற வந்தனர். அவர்களில் இரு இளம்பெண்கள் தங்கள் முகத்தை மூடி திரையிட்டிருந்தனர். அந்த பெண்களைப் பார்த்ததும் நானா சாகேப் சந்தோர்கர் மனம் திடீரென சஞ்சலத்துக்குள்ளானது. உடனே அவர் மசூதியில் இருந்து வெளியே செல்ல முயன்றார்.
எல்லாம் அறிந்த பாபா சிரித்தப்படியே, “நானா எங்கே போகிறாய்? இங்கே வா. என் அருகில் உட்கார்” என்று அவரைப் பிடித்து இழுத்து தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டார். இதையடுத்து வந்திருந்த குடும்பத்தினர் ஒவ்வொருவராக சாய்பாபாவிடம் ஆசிப் பெற்றனர். அந்த குடும்பத்து இளம்பெண் பாபா அருகில் வந்ததும், முகத்திரையை விலக்கி, பாபாவைப் பார்த்து வணங்கி ஆசி பெற்றாள். பிறகு முகத்தை மீண்டும் திரையிட்டு மூடிக் கொண்டாள்.
அவள் பாபாவிடம் முகத்தைக் காட்டியது ஓரிரு நிமிடங்கள்தான். பாபா அருகில் அமர்ந்திருந்த நானா சாகேப் சந்தோர்கர், அந்த பெண்ணின் அழகான முகத்தைக் கண்டு மேலும் மன சஞ்சலம் அடைந்தார். “என்ன அழகான முகம்” என்று அவர் உள்மனம் நினைத்தது. இன்னொரு முறை அந்த பெண்ணைப் பார்க்க மாட்டோமா என்று அவர் மனம் ஏங்கியது.
அடுத்த வினாடி நானா பக்கம் திரும்பினார் சாய்பாபா. “என்ன நானா…. ஏன் இந்த அளவுக்கு உன் மனம் சஞ்சலம் அடைகிறது. உனக்குள் இப்படி கலக்கம் வரக்கூடாது. அழகை கண்டால் பாராட்ட வேண்டும். அல்லது வணங்க வேண்டும். பெண்களின் அழகைப் பார்த்து மனதில் அழுக்கை சேர்க்கக் கூடாது” என்றார்.
நானாவுக்கு கடும் அதிர்ச்சியாகி விட்டது.
தனது மனம் ஓரிரு நிமிடம் சஞ்சலப்பட்டதைக் கூட பாபா கண்டுபிடித்து விட்டாரே என்று பேச முடியாதபடி இருந்தார். பிறகு மெல்ல தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பாபாவிடம் மன்னிப்புக் கேட்டார். பாபா அவரிடம், “மனதில் தூய்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் மனதில் ஏற்படும் சஞ்சலம் பிறகு சலனமாகி உன்னை திசை மாற்றி விடும்” என்றார்.
“சரி” என்று தலையாட்டி விட்டு நானா புறப்பட்டார். வெளியில் வந்த அவரிடம் “என்ன நடந்தது?” என்று சாமா கேட்டார். நடந்தது அனைத்தையும் நானா ஒன்று விடாமல் சொன்னார். சாமாவுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
“அந்த குடும்பத்தினர் பாபாவிடம் ஆசி பெற்ற போது நானும் அங்கு தானே இருந்தேன். உன் மனம் மட்டும் சஞ்சலப்படுவதை பாபா எப்படி அறிந்தார்” என்று சாமா வியந்தார்.
நானா செய்த தவறு மசூதியில் இருந்த யாருக்கும் தெரியவில்லை. அதுபோல நானாவை பாபா அறிவுரை கூறி திருத்தியதும் யாருக்கும் தெரியவில்லை. சாய்பாபாவின் பேச்சு அனைத்துப் பக்தர்களுக்கும் சூத்திரம் போன்றது. பாபாவின் அறிவுரைகள் சுருக்கமாக இருந்தாலும் கம்பீரமானது.
பாபாவின் வார்த்தைகள் கர்மங்களை குறைத்துக் கொள்ளவும், அதை எளிதாக சுமக்கவும் வழிகாட்டியது. அது எப்படி என்பதை பாபாவின் மற்றொரு அற்புதம் முலம் அடுத்த வாரம்வியாழக்கிழமை காணலாம்.