நீதிமன்ற தீர்ப்பை மதித்து, நாட்டை விட்டு வெளியேறுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பதாக ஜோகோவிச் தெரிவித்தார்.
செர்பிய டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சின் விசாவை ஆஸ்திரேலிய அரசு ரத்து செய்தது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் ஜோகோவிச்சின் விசாவை ஆஸ்திரேலிய அரசு ரத்து செய்தது. இதனை எதிர்த்து ஜோகோவிச் தாக்கல் செய்த மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது. இதனால், நாளை தொடங்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார் ஜோகோவிச்.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினால் ஜோகோவிச் கடும் ஏமாற்றம் அடைந்தார். ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடும் நம்பிக்கை சிதைந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
‘எனது விசாவை ரத்து செய்வது தொடர்பான அமைச்சரின் முடிவை, நீதித்துறை மறுஆய்வு செய்வதற்கான எனது மனுவை நிராகரித்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். எனவே, நான் ஆஸ்திரேலியாவில் தங்கி ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க முடியாது. நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறேன். மேலும் நான் நாட்டை விட்டு வெளியேறுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பேன்’ என்றார் ஜோகோவிச்.