டீன் ஏஜ் பெண்களை அதிகமாக திட்டவும், கண்டிக்கவும் முடியாது. சிலர் பொசுக்கென்று ஏதேனும் முட்டாள்தனமான முடிவை எடுத்து விடுவார்கள்.
டீன் ஏஜ் பெண்கள் அந்த வயதுக்குரிய துறுதுறுப்புமிக்கவர்களாக இருக்கிறார்கள். அதோடு பிடிவாதம், கோபம், மூர்க்கத்தனம் போன்றவைகளும் கலந்திருக்கிறது. அவர்களின் நலனுக்காக சொல்லப்படும் விஷயங்கள்கூட அவர்களின் கோபத்தைத் தூண்டுவது போன்று அமைந்து விடுகிறது. குடும்பத்தினர் அறிவுரை கூறினால் அதை காது கொடுத்து கேட்கும் மனநிலையிலும் அவர்கள் இருப்பதில்லை. பெரும்பாலும் மோதல்போக்கையே கடைப்பிடிக்கிறார்கள். இதில் பெரிதும் பாதிக்கப்படுவது அம்மாக்கள்தான். டீன்ஏஜ் பெண்களை மென்மையான போக்குடன் அணுகி, பக்குவமாக அவர் களுக்கு வாழ்க்கையை புரியவைப்பது அம்மாக்களுக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது.
பெரும்பாலான டீன் ஏஜ் பெண்கள் அப்படி முரட்டுத்தனமாகத்தான் நடந்துகொள்வார்களா? என்ற கேள்விக்கு, ‘கிட்டத்தட்ட அப்படித்தான் நடந்துகொள்வார்கள்’ என்று சொல்கிறது ஆய்வு. இதற்கு அந்தப்பருவத்தில் ஏற்படும் சில ஹார்மோன்களின் மாற்றம்தான் காரணம். லேசான உரசல் கூட பெரிய பூகம்பமாக வெடித்துவிடும். விஷயமே இல்லாமல் பிரச்சினைகள் தோன்றும்.
டீன் ஏஜ் பெண்கள் அனைவருமே, அம்மாக்கள் தங்களை நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அப்படி நம்பாவிட்டால் அதனை அவமரியாதையாக நினைக்கிறார்கள். அப்படி நினைத்துவிட்டால் அவர்களுக்கு அம்மாக்கள் மீது கோபம் தோன்றுகிறது. தேவையில்லாத வார்த்தைகளை பயன்படுத்தி தங்கள் கோபத்தை கொப்பளிக்கிறார்கள். அம்மாக்கள் பாதுகாப்பு நலன்கருதி சில விஷயங்களை சொல்வார்கள். அதனை ‘தன்னை நம்பவில்லை’ என்ற பொருளில் மகள்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது.
டீன் ஏஜ் பெண்களுக்கு பாதுகாப்பற்ற விஷயங்கள் என்னென்ன என்பது அம்மாவிற்கு தான் தெரியும். அவர்கள் அந்த வயதை கடந்து வந்தவர்கள் என்பதால் அதற்கேற்ற முன்னேற்பாடுகளுடன் மகள்களை அணுகுவார்கள். இரவு நேரத்தில் மகள்கள் வெளியே செல்வதை விரும்பமாட்டார்கள். அரைகுறை பேஷன் ஆடைகளை அணிவதை எதிர்ப்பார்கள். மற்றவர்களோடு அநாவசியமாக பேசுவது, வெகு நேரம் போனில் உரையாடுவது இதெல்லாம் அம்மாக்களுக்கு பிடிக்காமல் போகலாம். அதற்கு நியாயமான காரணங்களும் இருக்கின்றன. அதை புரிந்துகொள்ளாமல் மகள்கள் கோபத்தை வெளிக்காட்டக்கூடாது.
அழகாக உடை உடுத்துவது வேறு, ஆபாசமாக உடை உடுத்துவது வேறு. இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது. உடலுக்கும், கலாசாரத்திற்கும் பொருத்தமான உடை, அழகானது. உடல் உறுப்புகளை காட்டும் விதத்தில் உடுத்துவது ஆபாசமானது. சினிமாக்களைப் பார்த்து தன்னையும் உலக அழகியாக பாவித்து அதே போல ஆடை அணியும் பெண்களுக்கு அம்மாவின் கண்டிப்பு எரிச்சல் தருவதாகவே அமையும். அதேவேளையில் மகள் அழகாகத் தோற்றமளித்தால் முதலில் மகிழ்ச்சி அடைவது அம்மாதான். நாலு பேர் மத்தியில் அரைகுறையாக இருந்தால் அதைப்பார்த்து வேதனைப்படுவதும் அம்மாதான். உடையில் எல்லையை கடைப்பிடிப்பது நாகரிகம். எல்லையை மீறுவது அநாகரிகம்.
இரவு நேரத்தில் பெண்கள் தனியாக வெளியே செல்வது எந்த விதத்திலும் பாதுகாப்பானதல்ல. அது பலவிதங்களில் பின்விளைவுகளை உருவாக்கும். வெட்டியாக தோழிகளுடன் ஊர் சுற்றிவிட்டு இரவு வீட்டிற்கு திரும்பும் மகளை அம்மா கண்டிக்கத்தான் செய்வார். தன்னுடைய நலனுக்காகத்தான் தாயார் கண்டிக்கிறார் என்ற மனநிலை உருவாகவேண்டும். தான் எது செய்தாலும் யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்ற மனநிலை உருவாகக்கூடாது. தான் இரவில் வீடு திரும்பும்வரை அம்மா எவ்வளவு மன உளைச்சலோடு காத்திருப்பார் என்பதை மகள் நினைத்துப்பார்க்கவேண்டும். இதில் மத்தளத்திற்கு இருபுறமும் அடி என்பதுபோல், மகள் இரவில் தாமதமாக வீடு திரும்பினால், அவளிடம் நேரடியாக கேட்காமல் கணவர், மனைவியிடம் ‘நீ பெண்பிள்ளையை வளர்க்கும் லட்சணம் இதுதானா?’ என்று குத்தலாக கேள்வி கேட்பார்.
டீன் ஏஜ் பெண்களை அதிகமாக திட்டவும், கண்டிக்கவும் முடியாது. சிலர் பொசுக்கென்று ஏதேனும் முட்டாள்தனமான முடிவை எடுத்து விடுவார்கள். சிலர் உப்பு சப்பு இல்லாத விஷயத்திற்கெல்லாம் கோபித்துக்கொண்டு பேசாமல் இருந்துவிடுவார்கள். சிலரோ தற்கொலை முயற்சியில் ஈடுபடும் மன நிலைக்கு சென்று விடுவார்கள். அதை நினைத்து சில தவறுகளை சகித்துக்கொள்ள வேண்டிய மனநிலைக்கு அம்மாக்கள் வந்துவிடுகிறார்கள். பின் விளைவுகளை பற்றி யோசிக்காமல் செயல்படும் அவர்களது நடவடிக்கைகளை சகித்துக்கொண்டு அவர்களை பாதுகாப்பது அம்மாக்களுக்கு கஷ்டமான வேலை தான். அவர்களை சமாளிப்பதற்கு அதிக பொறுமை தேவைப்படும்.
டீன் ஏஜ் பெண்களின் அம்மாக்களுக்கு உதவுவதற்கு சில அமைப்புகள் செயல்படுகின்றன. அவர்கள், டீன் ஏஜ் பெண்களை சமாளிக்க பயிற்சி அளித்து, அம்மாக்களின் டென்ஷனைக் குறைக்கிறார்கள். ‘ஹெல்பிங் மதர்ஸ்’ என்ற இந்த அமைப்புகளில் மருத்துவர்களும், குடும்ப நல ஆலோசகர்களும் இருப்பார்கள். அவர்கள் தேவையான ஆலோசனைகளை தருவார்கள். இணையதளம் மூலமாகவும் இச்சேவையைப் பெறலாம். அவரவர் பிரச்சினைகளை சொல்லி தீர்வு கேட்கலாம்.
கூடுமானவரை கோபம், கண்டிப்பு, இதை விடுத்து மிக மென்மையாக பிரச்சினைகளை அணுகலாம். டீன் ஏஜ் பெண்களை பொருத்த வரையில் ‘கையில் உள்ளது கண்ணாடி பொருள்’ என்பதை ஒவ்வொரு அம்மாவும் உணர வேண்டும். எந்த நிலையிலும் அவர்களின் நடவடிக்கைகளை கண்டு பதற்றமோ, கோபமோ கொள்ளக்கூடாது. அன்பான, நம்பிக்கையான வார்த்தை களைகூறி அவர்களுக்கு புரியவைக்க வேண்டும். நீங்கள் சொல்லும் அறிவுரைகளை அந்த சமயத்தில் நிராகரிக்கலாம். ஆனால் அதைபற்றி நிச்சயம் சிந்திப்பார்கள். அப்போது அவர்களிடத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்.