கோமா நிலையிலிருந்து மீண்ட பெண் ஒருவர், நினைவிழந்த நிலையிலேயே ஒரு குழந்தைக்குத் தாயாகியிருப்பதை அறிந்து அதிர்ச்சியுற்ற சம்பவம் அயர்லாந்தில் இடம்பெற்றுள்ளது.
சியாரா மரே (33) என்பவர் அயர்லாந்தின் ஃபெர்மனோ பகுதியைச் சேர்ந்தவர். இவரது கணவர் ஜோன் (36). கருவுற்றிருந்த சியாராவின் பிரசவத்துக்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது.
எனினும், திடீரென மூளையின் நாளம் ஒன்றில் இரத்தக் கட்டி ஏற்பட்டதால் பாரிசவாதத் தாக்குதலுக்கு இலக்கானா சியாரா நினைவிழந்து விழுந்தார்.
வீட்டில் யாரும் இருக்காததால் சுமார் ஏழு மணிநேரம் நினைவிழந்த நிலையில் இருந்துள்ளார்
வேலை முடிந்து வீடு திரும்பிய ஜோன், சியாராவின் நிலையைக் கண்டு பதறி உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தார்.
சியாரா கோமாவிலிருந்தாலும், கருவிலுள்ள குழந்தை ஆரோக்கியமாக இருந்ததால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி சியாரா வயிற்றிலிருந்த குழந்தை சத்திர சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டது.
மறுநாள், சியாராவுக்கு சுமார் 3 மணிநேர சத்திர சிகிச்சையைச் செய்து மூளையில் இருந்த கட்டியை மருத்துவர்கள் அப்புறப்படுத்தினர்.
பத்து நாட்களுக்குப் பின் கோமாவில் இருந்து மீண்ட சியாரா, தன் அருகே தனது ஆண் குழந்தை படுத்திருப்பதைக் கண்டு முதலில் அதிர்ச்சியுற்றபோதும், நடந்ததை அறிந்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
அவர் கண் விழித்த அதே தினம்தான் சியாராவின் கணவர் ஜோனின் பிறந்த தினம். தன் கணவரது பிறந்த தினமே தனக்கு மறு பிறப்பாக அமைந்ததை எண்ணி உருகுகிறார் சியாரா.