தற்போதைய பிரச்சினைகளை கருத்தில் கொண்டு ஹிட்லர் போன்ற தலைவர்கள் நாட்டுக்கு தேவை என காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன இன்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவை ஹிட்லர் போன்ற தலைவர் என்று சிலர் கூறுவதாக கூறிய அமைச்சர், அவர் அவ்வாறானவர் அல்ல, ஜனநாயக தலைவர் எனவும் தெரிவித்தார்.
அவர் ஜனநாயகத் தலைவனாக இல்லாவிடில், தொழிற்சங்கங்கள் எப்படி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ அவதூறு மற்றும் விமர்சனங்களுக்கு உள்ளான திறமையான நேர்மையான தலைவர் என்றும், அவர் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டியதாகவும் சந்திரசேன தெரிவித்தார்.
கொவிட் பிரச்சினை காரணமாக அரசாங்கம் பாரியளவு வருமானத்தை இழந்துள்ளதாக தெரிவித்த காணி அமைச்சர், நாடு இந்த நிலையில் இயங்குவதையிட்டு அரச தலைவர் மகிழ்ச்சியடைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நாடு படிப்படியாக மீண்டு வருவதாகவும், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி முதல் நாடு தழுவிய அளவில் ஒரு இலட்சம் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இதன் கீழ் சிறு கைத்தொழில்கள், கால்நடைகள், குடிசைத் தொழில்கள் என்பன அபிவிருத்தி செய்யப்படும் என்றார்.
நாட்டின் டொலர் நெருக்கடி என்பது இந்த அரசாங்கத்தின் பிரச்சினையல்ல எனவும், முன்னர் நாட்டை ஆண்டவர்கள் திறைசேரியில் டொலர்களை குவித்திருந்தால் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டிருக்காது எனவும் சந்திரசேன தெரிவித்தார்.
மக்கள் எதிர்நோக்கும் பல சிரமங்கள் இருப்பதை ஒப்புக்கொண்ட அவர், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார். தடுப்பூசியின் வெற்றியானது நெருக்கடியைத் தணிக்கவும், நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டுவரவும் உதவியது என்றும் அவர் கூறினார்.