மட்டக்களப்பு தலைமையக காவல்துறை பிரிவுக்குட்பட்ட பார்வீதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலமாக இன்று காலை மீட்கப்பட்டவர் முச்சக்கர வண்டி சாரதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முச்சக்கர வண்டியும் சேதமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை கறுவப்பங்கேணியிலிருந்து மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு பயணிகளை ஏற்றுவதற்காக சென்றவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவருகின்றது.
சடலமாக மீட்கப்பட்டவர் கறுவப்பங்கேணி, நாவலர் வீதியை சேர்ந்த 49வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான மாசிலாமணி தர்மரெட்னம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அதிகாலையில் பொதுமக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பிலான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.