தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதை கடற்றொழில் கூட்டுறவுச்சங்கத் தலைவர் வரவேற்றுள்ளார். அது மீனவர்களின் மனநிலையை பிரதிபலிக்கலாம். ஆனால், இவ்விடயத்தில் இலங்கை இந்திய அரசுகள் மற்றும் அவற்றின் சட்டங்களுக்கு
அப்பால் ஈழ, தமிழக மக்களின் நல்லுறவையும் அதன் எதிர்கால முக்கியத்துவத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார் தமிழ்மக்கள் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன். அவர் இன்று (25) வெளியிட்டுள்ள அறிக்கையில்-
இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதற்கான முடிவும் அதனை வரவேற்று கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கங்களின் சம்மேளனத் தலைவரின் கருத்தும் தொடர்பாக, சம்மேளனத்தலைவரின் ஆதங்கமும் ஆவேசமும் நியாயமானது என்பதுடன் அது ஒட்டுமொத்த கடற்றொழிலாளர்களின் மனக்கிடக்கை என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஏனெனில் இழுவைப்படகுகளால் எமது கடற்றொழிலாளர்களின் அன்றாட வாழ்கையே கேள்விக்குறியாகிவிட்ட சூழ்நிலையிலும் சம்பந்தப்பட்ட அரசுகள் எவ்விதமான தீர்வையும் காணாது இழுத்தடித்து வருவதாகும்.
எனினும் இவ்விடயத்தில் இலங்கை இந்திய அரசுகள் மற்றும் அவற்றின் சட்டங்களுக்கு
அப்பால் ஈழ, தமிழக மக்களின் நல்லுறவையும் அதன் எதிர்கால முக்கியத்தவத்தையும்
கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இதில் எம்மினத்தின் எதிர்காலமும் தங்கியுள்ளது
என்பதையும் எல்லோரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஈழ, தமிழக மக்களிடையே பகைமையை வளர்ப்பதில் இலங்கை ஆட்சியாளர்கள் எப்போதுமே முனைப்பைக் காட்டி வருகிறார்கள். கிடைக்கக்கூடிய ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் அவர்கள் தவறவிடுவதில்லை. இன்று தமிழர் ஒருவரே அத்துறைக்கு அமைச்சராக இருப்பது இலங்கை அரசுக்கு மேலதிக வாய்ப்பு.
கைப்பற்றப்பட்ட படகுகளை விற்பதன் மூலம் இப்பிரச்சினையை தடுக்கமுடியாது.
எல்லைமீறிய மீனவர்களை சட்டத்தினால் தண்டிக்க வாய்ப்பிருந்தும் அயலுறவின் அடிப்படையில் சட்டமா அதிபரின் விதந்துரைப்பின் கீழ் விடுதலை செய்யப்ப்டுவதையும்
நாம் அறிவோம். ஆட்சியாளரின் சூழ்ச்சிக்கு பலியாகாமல் பிரச்சினைக்கு தீர்வுகாண முயல வேண்டியது எமது கடமையாகும். எனவே இதனை விடுத்து இழுவைப்படகுகள் உட்பட தமிழக மீனவர்களால் எமது மீனவர்கள் பாதிப்படைவதைத் தடுப்பதற்குரிய நிலயான தீர்வை எட்டுவதற்கு இருநாட்டு அரசுகளும் உடன் நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும். பிரச்சினைக்கு சுமுகமான
தீர்வைக்காணவே கடற்றொழில் அமைச்சர் முயலவேண்டும் என எதிர்பார்க்கிறோம்.