பல உயர் கல்வி பாடநெறிகள் மற்றும் விசேட பட்டப்படிப்புகள் முழுமையாக தற்காலத்தில் ஆங்கிலத்தில் மாத்திரமே இருப்பது இலங்கையின் உரிமையையும் நாட்டின் அடையாளத்தை பாதுகாக்கும் தேசிய மொழிகளுக்கும் அச்சுறுத்தல் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதனால், உயர் கல்வியை ஆங்கில மொழியில் மாத்திரம் வரையறுக்கப்பட கூடாது எனவும் அவர் கூறியுள்ளார். சர்வதேச நுழைவுகளுக்கு ஆங்கில மொழி அவசியம் என்பதை ஏற்றுக்கொண்டாலும் அனைத்து விடயங்கள் காரணமாக எமது மொழிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உயிர் மொழியாக எமது மொழிகளை பாதுகாக்க வேண்டும்.
எமது மொழிகளான சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளை புறந்தள்ளி விட்டு, மற்றுமொரு மொழியை அடிப்படையாக கொண்டு மாத்திரம் செயற்படுவதன் மூலம் எமது மொழிகள் அழிவுக்கு உள்ளாகும்.
ஆபிரிக்காவில் சில பிரதான மொழிகளுக்கு ஏற்பட்ட தலைவிதியை சிங்கள மொழியும் அனுபவிக்க நேரிடும். உலகில் பல நாடுகள் உயர் கல்வியை வழங்கும் போது தமது மொழியின் அடையாளங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயற்படுவது போல் இலங்கையும் உயர் கல்வியை வடிவமைக்க வேண்டும் எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
வாசுதேவ நாணயக்கார தேசிய மொழிகள் அமைச்சராக இருந்த காலதத்தில் அவர் பெற்ற அனுபவங்கள் மற்றும் சிங்கள மொழிக்குள்ள முக்கியத்துவம் மாத்திரமல்லாது அடையாளம் தொடர்பான அவரது எண்ணக்கருவை அடிப்படையாக கொண்டு கலாநிதி ஈ.எம்.ரத்னபால எழுதிய நூலை வெளியிட்டு வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.