இலங்கையின் பல பாகங்களிலும் இன்று மழைவீழ்ச்சி கிடைக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இன்றைய வானிலை குறித்து வெளியான முன்னறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
வட மாகாணத்தில் சில இடங்களில் 50 மி.மீ.க்கு மேல் ஓரளவு பலத்த மழைவீழ்ச்சியை எதிர்பார்க்கலாம்.
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம் – எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும். இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.