ஆசிரியரால் தாக்கப்பட்டு மயக்கமுற்ற நிலையில் திருகோணமலை சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றுள்ளது.
இதனால் மாணவர்கள் – ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து வீதியினை மறித்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
திருகோணமலையிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையான சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் சில வருடங்களுக்கு முன் ஹபாயா விவகாரம் தொடர்பில் பிரச்சினை எழுந்த நிலையில் இன்று மீண்டும் அவ்விவகாரம் மாணவர்கள் – ஆசிரியர்கள் – பெற்றோர் மத்தியில் பூதாகரமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஓர் ஆசிரியை முகத்தை முழுவதுமாக மறைத்து ‘ஹபாயா’ அணிந்து பாடசாலைக்கு வந்த நிலையில் மாணவர்களும் பெற்றோரும் இதை எதிர்த்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
இதை குறித்த ஆசிரியை காணொளிப் பதிவு செய்துள்ளதாகவும் அதைத் தடுக்க அதிபர் தலையீடு செய்ததையடுத்து அதிபரை குறித்த ஆசிரியை தள்ளி விட்டதாகவும் இதையடுத்து கீழே விழுந்து மயக்கமடைந்த அதிபர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.