தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்றினை ஏற்படுத்தித் தருவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் யாழில் வைத்து உறுதியளித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற காலை உணவு சந்திப்பின் போது பேராசிரியர் பீரிஸ் இந்த விடயத்தினை கூறியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை அடைவதற்கு, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் இலங்கை செல்ல வேண்டும் என சுமந்திரன் வலியுறுத்தினார்.
ஆனால் ஆளும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சில உறுப்பினர்கள் அண்மையில் அதனை இரத்துச் செய்யுமாறு கோரியதன் மூலம் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதேநேரம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தங்களுக்கு அமைச்சரவை இறுதி அனுமதி வழங்கியுள்ளதாக பேராசிரியர் பீரிஸ் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் குறித்த கூட்டத்தில் தாம் பயங்கரவாத தடைச் சட்டம் குறித்து பிரச்சினையை எழுப்பியதாகவும், சீர்திருத்தம் என்ற சொல்லுக்கு மறுவரையறை செய்ய வேண்டும் என்று அவர்களிடம் வலியுறுத்தியதாகவும் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக கடந்த ஆண்டு அரச தலைவரை சந்தித்து கலந்துரையாட திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த கூட்டம் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.