சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது பெண்ணின் மூக்கில் புகுந்து மூளைக்கு சென்ற கரப்பான் பூச்சியை ஸ்டான்லி மருத்துவர்கள் அகற்றி சாதனை செய்துள்ளனர்.
சென்னை ஈஞ்சம்பாக்கம் கவுரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி செல்வி (வயது42). இவர் கடந்த 31-ந்திகதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரது மூக்கு வழியாக ஏதோ புகுந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. இதனால் அவருக்கு மூக்கின் உற்புறத்திலும் தலையின் உள்புறத்திலும் பயங்கர குடைச்சல் மற்றும் வலி ஏற்பட்டது.
உடனடியாக அவர் நள்ளிரவே அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அவர்கள் பரிசோதித்து விட்டு மூக்குக்குள் ஏதாவது சதை வளர்ந்திருக்கும் என்று கூறி மருந்து கொடுத்து அனுப்பினர். வீட்டுக்கு வந்த செல்விக்கு அந்த மருந்தை சாப்பிட்ட பிறகும் வலி குறையவில்லை.
இதனால் சிறிது நேரம் கழித்து அருகில் உள்ள வேறொரு தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு டாக்டர்கள் அவருக்கு ஸ்கேன் எடுத்து பரிசோதித்தபோது மூளைக்கு அடிப்பகுதியில் கரப்பான் பூச்சி இருப்பதை கண்டுபிடித்தனர். இதைக் கேட்டதும் செல்வி அதிர்ச்சி அடைந்தார். அப்போது தான் தூங்கிக் கொண்டிருந்த போது மூக்கின் வலது துவாரம் வழியாக கரப்பான் பூச்சி புகுந்து மூளையின் அடிப்பகுதி வரை சென்றிருப்பது தெரிய வந்தது.
கரப்பான் பூச்சியை வெளியே எடுக்க தங்கள் மருத்துவமனையில் வசதி இல்லை என்றும் உடனடியாக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறும் வைத்தியர்கள் அறிவுரை கூறினர்.
இதையடுத்து நேற்று காலை செல்வி சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை காது மூக்கு தொண்டை பிரிவு டாக்டர்கள் எம்.என்.சங்கர், முத்து சித்ரா ஆகியோர் மூக்கு உள்நோக்கு கருவி மூலம் பரிசோதித்தனர். அப்போது மூளையின் அடிப்பகுதியில் கரப்பான் பூச்சி உயிரோடு இருப்பது தெரிய வந்தது.
அதனை வேக்கம் சக்ஷன் கருவி மூலம் எடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது பலன் அளிக்கவில்லை.
இதையடுத்து நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய நேஷல் எண்டோஸ் கோப்பி கருவி மூலம் கரப்பான் பூச்சி உயிருடன் அகற்றப்பட்டது. அதன் பிறகு செல்விக்கு வலி தீர்ந்தது. அவர் நலமாக உள்ளார்.