பிரதமர் மகிந்த ராஜபக்ச போரில் வென்றதை போன்று அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச கொரோனா நெருக்கடியில் வென்றுள்ளார் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando) தெரிவித்துள்ளார்.
குருணாகல் பிரதேச சபையின் புதிய மூன்று மாடி கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
“21 கோடி ரூபாவுக்கும் மேல் நிதியை செலவிட்டு, இந்த புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் மக்களுடன் ஒன்றாக இருந்து, தற்காலிக நெருக்கடிகளில் துரிதமாக மீண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
எதிர்க்கட்சியினர் அப்பாவி மக்களை வீதியில் இறக்கி, அவர்களில் வாழ்க்கையை பலி கொடுக்க நடவடிக்கை எடுத்தன. அரசதலைவர் கோட்டாபய ராஜபக்சவின் தலைமையின் கீழ் நாட்டை அபிவிருத்தி செய்ய புதிய வேலை திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்.
கடந்த அரசாங்கத்தை போல் செய்த வேலைகளை காட்டி மேளம் அடித்தது போல் தற்போதைய அரசாங்கம் செய்யாது. அரசாங்கத்திற்கு வேலை செய்ய இன்னும் காலம் இருக்கின்றது” என மேலும் தெரிவித்துள்ளார்.