இன்றைய சங்கடஹர சதுர்த்தி நாளில், விநாயகப்பெருமானை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் வேதனையும் துக்கமும் காணாமல் போகும். சிவபெருமானுக்கு மாதந்தோறும் சிவராத்திரி விசேஷம். முருகப்பெருமானுக்கு மாதந்தோறும் சஷ்டியும் கார்த்திகையும் சிறப்பு வாய்ந்தது. பெருமாளுக்கு ஏகாதசியும் மகத்துவம் வாய்ந்தது. அதேபோல், விநாயகப் பெருமானை வழிபட சங்கடஹர சதுர்த்தி நாள் மிக முக்கியமானதொரு நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.
சங்கடஹர சதுர்த்தி நாளில், காலையில் இருந்து விரதம் மேற்கொள்ளலாம். அல்லது மாலையில் அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று தரிசிக்கலாம். மேலும் அம்மன் ஆலயங்கள், சிவாலயங்களில் உள்ள விநாயகர் சந்நிதிகளுக்கும் சென்று வழிபடலாம்.
அப்போது, பிள்ளையாரப்பனுக்கு அருகம்புல் மாலை சார்த்துவதும் வெள்ளெருக்கு மாலை சார்த்துவதும் விசேஷம். அதேபோல், வீட்டில், விளக்கேற்றி, விநாயகரை மலர்களால் அலங்கரித்து, சர்க்கரைப் பொங்கல், பாயசம், கேசரி, கொழுக்கட்டை, சுண்டல் என ஏதேனும் ஒன்றைக் கொண்டு நைவேத்தியம் செய்வது மகத்துவம் வாய்ந்தது..
இன்று 4.2.22 வெள்ளிக்கிழமை சங்கடஹர சதுர்த்தி. தை மாத சங்கடஹர சதுர்த்தி. ஆகவே, இன்றைய தினம், சங்கடஹர சதுர்த்தியில், மாலையில் ஆலயம் செல்லுங்கள். ஆனைமுகனை வணங்குங்கள். முடிந்தால், அபிஷேகப் பொருட்களை வழங்கி வழிபடுங்கள்.
உங்கள் சங்கடங்கள் அனைத்தும் தீர்த்து வைப்பார் விநாயகப் பெருமான்! கடன் தொல்லையில் இருந்து மீட்டெடுப்பார். நல்ல வாழ்க்கைத் துணையை அமைத்துத் தருவார். இழந்த உத்தியோகத்தையும் பதவியையும் கெளரவத்தையும் பெற்றுத் தருவார் பிள்ளையாரப்பன்!