விவசாயிகளுக்கு சேதனப் பசளைப் பயன்பாடு தொடர்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அரச தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற பசளைச் செயலணிக் கூட்டத்தின்போதே அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சேதனப் பசளைப் பயன்பாடு தொடர்பில் போதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படாமை காரணமாகவே, கடந்த போகத்தின்போது பல விவசாயிகள் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது.
இம்முறை அந்தக் குறைகளைத் தவிர்த்து, விவசாய ஆராய்ச்சி உதவியாளர்கள் ஊடாக விவசாயப் பெருமக்களுக்குரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும்.
சிறுபோகத்துக்குத் தேவையான பசளைகளை, உரிய காலத்துக்குள் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். பல்வேறு தொழில்நுட்ப முறைமைகள் பயன்படுத்தப்பட்டு, தேசிய அளவில் சேதனப் பசளை வகைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
எந்தக் காரணம் கொண்டும் விவசாயிகளின் வருமானம் குறைவதற்கு வழியமைக்கக் கூடாது. அது தொடர்பான நம்பிக்கையை விவசாயிகள் மத்தியில் கட்டியெழுப்ப வேண்டும்.
கடந்த காலங்களில் எதிர்கொண்ட வெற்றியளிக்காத அனுபவங்கள் காரணமாகவே, சேதனப் பசளை விவசாயத்துக்கு விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை” என தெரிவித்துள்ளார்.