இலங்கையில் கார் உற்பத்தி தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வாகன இறக்குமதியை ஆரம்பிப்பது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நிதியமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
எதிர்காலத்தில் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுமா இல்லையா என்பதை தெரிந்துக் கொள்ள முடியுமா என ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரிடம் வினவியுள்ளார்.
“வாகனங்களுக்கு முன்னர் பருப்பு கொண்டுவர வேண்டும் அல்லவா. நாளை காலையில் பருப்பு கொள்கலன்களை காப்பாற்றிக் கொள்வது எப்படி என்றே நான் சிந்தித்துக் கொண்டிருக்கின்றேன். எப்படியாவது இங்கேயே கார் ஒன்றை செய்வோம்” என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வருடாந்தம் எங்கள் நாடு இறக்குமதி எண்ணெய் இறக்குமதிக்காக 20 சதவீதம் செலவு செய்கின்றது. மொத்த ஏற்றுமதி வருமானம் ஒரு மாதத்திற்கு 1,000 மில்லியன் டொலருக்கும் குறைவாக இருக்கும்போது, எண்ணெய்க்காக மட்டும் ஒரு மாதத்திற்கு சுமார் 350 மில்லியன் டொலர் செலவிட நேரிடுகின்றது.
இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் எரிபொருளில் 70 சதவீதம் வாகனங்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. மின்சாரம் தயாரிக்க சுமார் 21 சதவீதம் பயன்படுத்தப்படுகின்றது.
4 சதவீதம் மாத்திரமே தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது. இதனால் எதிர்காலத்தில், வாகன இறக்குமதிக்கு ஒப்புதல் அளிக்கும் போது மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை கொடுப்போம் என நம்புகிறோம். அதற்கமைய வாகனங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கு முடிந்தவரை புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்த திட்டமிடுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.