உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் 57 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் இதுவரை 38 கோடியே 82 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் 57 லட்சத்து 30 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் இதுவரை 7 கோடியே 71 லட்சம் பேர் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதில் 9.20 லட்சம் பேர் இறந்துள்ளனர். பாதிப்பில் 3-ம் இடத்தில் உள்ள பிரேசிலில் இதுவரை 2.60 கோடி பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது. அங்கு இதுவரை 6.30 லட்சம் பேர் பலியாகி இருக்கிறார்கள். இதனால் அதிக பலி எண்ணிக்கை கொண்ட நாடுகளில் பிரேசில் 2-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் பாதிப்பு 4 கோடியே 19 லட்சத்தை கடந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா முதல் பலி ஏற்பட்டது. 204 நாட்கள் கழித்து அக்டோபர் தொடக்கத்தில் பலி எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்தது. அதன்பின், 207 நாட்களுக்கு பிறகு 2021 ஏப்ரல் இறுதியில் பலி எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது.
இரண்டாம் அலையின் கோர தாண்டவம் காரணமாக அடுத்த 26 நாட்களில் 1 லட்சம் பேர் இறந்தனர். இதனால் மே 23-ம் தேதி நிலவரப்படி, பலி எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது.
அடுத்த 39 நாட்களில் மேலும் 1 லட்சம் பேர் இறந்தனர். இதனால் ஜூலை 1-ம் தேதி நிலவரப்படி பலி எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. பின்னர் 217 நாட்களுக்கு பிறகு தற்போது பலி எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது.
மொத்தத்தில் முதல் அலையில் 1.55 லட்சம் பேர் பலியாகி இருந்தனர். 2-வது அலையில் மட்டும் 3.24 லட்சம் பேர் இறந்தனர். தற்போது 3-வது அலையில் இதுவரை 11,600 பேர் வரை மட்டுமே பலியாகி உள்ளனர்.
இதன்மூலம் முதல் இரண்டு அலைகளைவிட 3-வது அலையில் உயிரிழப்புகள் குறைவாக இருப்பது புள்ளி விபரங்களில் தெரிய வந்துள்ளது.