கஹதுடுவ பொலிஸ் கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பித்த இரு இளைஞர்கள், ஏ.டி.எம் திருட்டில் கைது செய்யப்பட்டனர்.
ஏ.டி.எம் அட்டையை தவறவிட்டவர், சில நிமிடங்களில் வங்கிக்கு அறிவித்து, அட்டை பயன்பாட்டை தடை செய்வதற்குள், 230,000 ரூபாவிற்கு பொருட்களை கொள்வனவு செய்துள்ளனர் கொள்ளையர்கள்.
அளுத்கம பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 31ம் திகதி ஏ.டி.எம் அட்டையை பயன்படுத்த பணத்தை பெற்றுவிட்டு, தவறுதலாக அட்டையை எடுக்காமல் சென்று விட்டார்.
வங்கிக்கு சென்ற சந்தேகநபர்கள் இருவரும் அந்த அட்டையை எடுத்து, கஹதுடுவ பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடியில் இருந்து அரிசி, மாவு, பருப்பு உள்ளிட்ட பெருந்தொகையான உணவுப் பொருட்களை பெற்றுக்கொண்டு, அந்த ஏ.டி.எம் அட்டையின் மூலம் பணத்தை செலுத்தினர்.
பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் பண்டாரகமவில் உள்ள நகைக்கடை ஒன்றிற்குச் சென்று ஒருவருக்கு நெக்லஸையும் மற்றவருக்கு வளையலையும் வாங்கிக் கொண்டு 200,000 ரூபாவிற்கும் அதிகமான பணத்தை, அந்த ஏ.டி.எம் அட்டையின் மூலம் செலுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏ.டி.எம் அட்டையை தொலைத்தவர், வங்கியை தொடர்பு கொண்டு அட்டையை செயலிழக்கச் செய்ய எடுத்துக் கொண்ட சில நிமிடங்களிற்குள், சந்தேகநபர்கள் ஐந்து தடவைகளில் 230,000 ரூபாய்க்கு மேல் பெறுமதியான பொருட்களை வாங்கியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், உரிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொலிஸ் கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் தமக்கு மன்னிப்பு வழங்குமாறு இரண்டு கொள்ளையர்களும் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.